பொதுவாக இருநாட்டு தொடர்பான விஷயங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. ஆனால் ஒரு சில சமயங்களில் இந்தியா அப்படி தலையிட்டால் அதில் முடிந்த உதவியை மட்டுமே செய்யுமே தவிர அந்தப் பிரச்னையை பெரிதாக்காது. அந்த வகையில் 400 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ஒரு வரலாற்று பிரச்னையை முடிக்க இந்தியாவின் உதவி காரணமாக அமைந்துள்ளது. அப்படி இந்தியா என்ன உதவி செய்தது? எந்த 400 கால பிரச்னை என்ன?


வரலாற்று பிரச்னை என்ன?


தற்போது இருக்கும் ஈரான் நாட்டை பெர்சியா என்று பல ஆண்டுகளுக்கு முன்பாக வரலாற்றில் குறிப்பிடப்படுவது வழக்கம். இந்த பெர்சியாவை 17ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் ஆட்சி செய்து வந்தவர் ஷா அப்பாஸ்- I. இவர் அந்நாட்டில் பெரிதும் போற்றப்பட கூடிய அரசர்களில் ஒருவர். இவர் மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை நீண்ட ஆண்டுகளாக ஜார்ஜியா நாடு வைத்து வந்தது. அதை ஈரான் நாடு முற்றிலும் மறுத்து வந்தது. 




அதாவது 1613ஆம் ஆண்டு ஷா அப்பாஸ்-I ஜார்ஜியோ நாட்டின் மீது படை எடுத்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ராணி கேடிவனை சிறை பிடித்து வந்துள்ளார். அவரை 10 ஆண்டுகளுக்கு மேலாக சிரஸ் என்ற நகரில் வைத்துள்ளார். 1624ஆம் ஆண்டு இவரை இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்று அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதை ராணி கேடிவன் ஏற்க மறுத்ததால் அவரை சித்திரவதை செய்து அரசர் ஷா அப்பாஸ்- I கொலை செய்ததாக ஜார்ஜியா நாட்டின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. 


இந்தியா எப்படி உள்ளே வந்தது?


இந்த குற்றச்சாட்டிற்கு உரிய ஆதாரம் இதுவரை இல்லாததால் ஈரான் நாடு இதை மறுத்து வந்தது. ராணி கேடிவன் கொலை செய்யப்படுவதற்கு ஒராண்டிற்கு முன்பாக சிரஸ் நகரத்திற்கு இரண்டு அகஸ்திய நாட்டின் கிறிஸ்துவ பேராயர்கள் ஒரு மிஷன் சேவை மையத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் ராணி கேடிவனின் உடலை கைப்பற்றியுள்ளனர். இந்த உடலை மறைத்து வைக்க அவர்கள் உடல் பாகங்களை தனி தனியாக வெட்டி வெவ்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் புதைக்க திட்டமிட்டுள்ளனர். 




அதன்படி ராணி கேடிவனின் ஒரு கை கோவாவில் அமைந்திருந்த புனித அகஸ்தினியன் கான்வென்ட் என்ற இடத்தில் உள்ள தேவாயலத்தின் அருகே புதைக்கப்பட்டிருந்தது. இதனை அப்போது அறிந்த சோவியத் யூனியன் இந்தியாவிடம் உதவி கேட்டது. சோவியத் யூனியன் பிரிந்த பிறகு ஜார்ஜியா அரசும் இந்தியாவிடம் உதவி கேட்டது. 


இந்தியா செய்த உதவி என்ன?


இந்த கோரிக்கையை ஏற்று 1980ஆம் ஆண்டு முதல் இந்தியா உதவ தொடங்கியது. அந்த தேவாலயம் இடித்து மறுசீரமைப்பு செய்யப்பட்டதால் அந்த இடத்தை சரியாக கண்டறிவதில் சிக்கல் எற்பட்டது. இதனால் தொல்லியல் துறை மற்றும் மரபனு துறைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் 2004ஆம் ஆண்டு இருந்த வரைப்படத்தை வைத்து பழைய இடத்தை தொல்லியல் துறை கண்டறிந்து தோண்டும் பணியில் ஈடுபட்டது. அப்போது ராணியின் கியூகேடி 1 எலும்பு ஒன்று கிடைத்தது. அத்துடன் கியூகேடி2 மற்றும் கியூகேடி3 என்ற எலும்புகளும் கிடைத்துள்ளது. 


இந்த எலும்புகளை மத்திய மரபனு ஆராய்ச்சி பிரிவின் தங்கராஜ், நீரஜ் ராய் மற்றும் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த மரபனு மையத்தின் ஒத்துழைப்புடன் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் இந்த எலும்புகள் ராணி கேடிவனின் எலும்பு தான் என்று உறுதியானது. இந்த 400 ஆண்டுகள் பழமையான வரலாற்று பிரச்னைக்கான முதல் ஆதாரத்தை இந்தியா கண்டுபிடித்து மிகப்பெரும் உதவியை செய்துள்ளது. 




இந்த நிகழ்வு தொடர்பாக ஆராய்ச்சியாளர் தங்கராஜ் ஒரு ஆங்கில தளத்திற்கு, “நாங்கள் 800 முதல் 2000 ஆண்டுகள் வரை பல பொருட்களை மரபனு ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளோம். அதில் எதுவுமே இந்த அளவிற்கு கஷ்டமாக இருந்ததில்லை. அந்த அளவிற்கு இந்த ராணியின் எலும்பு கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது. ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த 33 நபர்களின் மரபனு மாதிரிகளை இந்த எலும்புகளுடன் பொறுத்தி பார்த்தப் போது அதில் 2 பேரின் மரபனு உடன் ஒத்து போனது. அதன்பின்னர் எஸ்டோனியா மரபனு கூடத்தின் உதவியுடன் இது ராணி கேடிவன் உடையது தான் என்பதை உறுதி செய்தோம்” எனக் கூறியுள்ளார். 


இந்த கண்டுபிடிப்பை இந்திய அதிகாரிகள் கடந்த 2014ஆம் ஆண்டே கண்டுபிடித்தனர். எனினும் முறைப்படி இந்த எலும்பை கடந்த 9ஆம் தேதி தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜார்ஜியா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க பிரச்னைக்கு ஆதாரம் கண்டுபிடித்து இந்தியா உலகளவில் தன்னுடைய தனி தன்மையை மீண்டும் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஆஸ்திரேலியா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பட்டம் வென்ற இந்தியர்; கோப்பையை கொடுத்த கோழிக்கறி!