இங்கிலாந்தில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் அறிய வகை குரங்கு வகை ஒன்றின் இனப்பெருக்கத்திற்காகப் புதிய ஐடியாவை அமல்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் ட்ரெந்தாம் குரங்குகள் பூங்காவில் அமெரிக்கப் பாடகர் மார்வின் கேயைப் போல ஒரு நபரை வரவழைத்து குரங்குகளை இனப்பெருக்கம் மேற்கொள்ள தூண்டியுள்ளது.
அமெரிக்கப் பாடகர் மார்வின் கேய் மிகவும் புகழ்பெற்ற பாடகர் ஆவார். அவர் தன்னுடைய கலைப் பயணத்திற்காக 1996ஆம் ஆண்டு இசைத்துறையின் உயரிய விருதான கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். எனினும் 1984ஆம் ஆண்டே துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார் மார்வின் கேய்.
பார்பாரி குரங்குகள் என்றழைக்கப்படும் வட ஆப்பிரிக்கா, ஜிப்ரால்டார் பகுதிகளைச் சேர்ந்த குரங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதால் கவலை கொண்ட பூங்கா நிர்வாகம், பாடகர் மார்வின் கேயைப் போல வேடமிட்டு பாடுவதில் புகழ்பெற்றவரான டேவ் லார்கி என்ற பாடகரைப் பணியில் அமர்த்தியுள்ளது.
மறைந்த மார்வின் கேயின் பாடல்களை டேவ் லார்கி பாட, அவரது கிளாசிக் பாடல்கள் குரங்குகளை இனப்பெருக்கத்திற்குத் தூண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மார்வின் கேய் பாடிய புகழ்பெற்ற பாடலான `லெட்ஸ் கெட் இட் ஆன்’ என்ற பாடலைப் பூங்கா வளாகத்திற்குள் நின்று டேவ் லார்கி பாடும் வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ட்ரெந்தாம் குரங்குகள் பூங்கா நிர்வாகம். மேலும், தனது ட்விட்டர் பதிவில் ட்ரெந்தாம் குரங்குகள் பூங்கா நிர்வாகம் சார்பில், `காதல் பாடல்களின் லெஜெண்ட் மார்வி கேய் பாடலின் லைவ் நிகழ்ச்சியைக் குரங்குகளுக்கு அளித்து இந்த இனப்பெருக்க காலத்தில் அவர்களிடையே காதலைப் பெருக்குகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்பாரி இனக் குரங்குகளின் எண்ணிக்கை கடந்த காலங்களில் பெருமளவில் குறைந்துள்ளன. தற்போதைய ஆய்வுகளின்படி, உலகம் முழுவதும் வெறும் 8 ஆயிரம் பார்பாரி குரங்குகளே எஞ்சியுள்ளன. காடுகளை அழிப்பதாலும், சட்டவிரோத விலங்குகள் கடத்தல், விற்பனை முதலான காரணங்களாலும் இந்த இனம் தற்போது அழியும் விலங்கு இனங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.