ஆண் குழந்தை வேண்டுமென்று கர்ப்பிணி மனைவியின் தலையில் ஆணி அடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் உலகம் முழுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள் என பெண்களுக்கு வயது வித்தியாசமின்றி குற்றச்சம்பவங்களில் சிக்கிக் கொள்கின்றனர். பல நேரங்களில் பெண்களுக்கான கொடுமைகள் தெரியாத நபர்களிடம் இருந்து மட்டுமல்லாமல் அறிமுகமான நபர்கள் மூலம் நடக்கிறது. சில நேரங்களில் தந்தை, கணவர், சகோதரர் என நம்பும் உறவுகள் மூலமும் கொடூரம் அரங்கேறுகிறது. அப்படியான ஒரு கொடூர சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.
தலையில் ஆணி..
தலையில் அடிக்கப்பட்ட ஆணியுடன் கர்ப்பிணி ஒருவர் பாகிஸ்தானின் பெஷாவர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். அரை மயக்கத்துடன் வழியும் ரத்தத்துடன் வந்த அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர், '' அப்பெண் அரை மயத்தில் இருந்தாலும் நிதானமாகவே இருந்தார். ஆனால் கடுமையான வலியால் துடித்துக்கொண்டிருந்தார். அவர் தலையில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது. சுத்தியல் போன்ற கனமான ஒரு இரும்பால்தான் இந்த ஆணியை அடித்திருக்கவேண்டும். எடுக்கப்பட்ட எக்ஸ் ரேவில் 2 இஞ்சுக்கு அதிகமாகவே ஆணி அவர் தலையில் புகுந்திருந்தது. நல்லவேளையாக அவரது மூளையில் ஆணி படவில்லை. ஆணியின் முனை மூளையை தொட்டிருந்தாலே பெரும் பாதிப்பு உண்டாகி இருக்கும் என்றார்
>> பாலியல் தொழிலில் ஈடுபட்ட 17 வயது மனைவி....? தலையை வெட்டி தெருவில் சுற்றிய கணவர்
ஆண் குழந்தை..
கர்ப்பிணியின் தலையில் ஆணி அடிக்க மூட நம்பிக்கையே முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்பெண்ணுக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். அடுத்துப் பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டுமென அப்பெண்ணின் கணவர் தொல்லை கொடுத்துள்ளார். இதற்காக அவரது மதம் சார்ந்த ஒருவரிடமும் குறி கேட்டுள்ளார். அவர் சொன்னதுபடி மனைவியின் தலையில் ஆணி அடித்தால் ஆண் குழந்தை பிறக்கும் என நம்பிய கணவர் மனைவியின் தலையில் ஆணியை அடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி குறி சொன்ன நபர் பெண்ணின் தலையில் ஆணி அடித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆணி அடித்த நபரை தேடி வருகின்றனர். அப்பெண் புகார் ஏதும் கொடுக்காத நிலையில் மருத்துவர்கள் தகவலின்பேரில் அப்பெண்ணை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மருத்துவமனையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அப்பெண் தொடர்பான தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்