மனைவியுடன் மலை உச்சியில் செல்ஃபி எடுக்கும்போது கீழே தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷைரில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி நடந்துள்ளது. 800 அடி உச்சியில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. கடைசியாக தன் கணவர் அலறும் குரல் கேட்டு திரும்பிப் பார்க்கும் போது அவர் கீழே விழுந்து கிடந்ததாக அந்தப் பெண் தெரிவித்தார்.


மீட்புக் குழு சம்பவம் குறித்து கூறியதாவது:
எங்களுக்கு மலையில் இருந்து ஒருவர் தவறி விழுந்துவிட்டார் அவரை மீட்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது. உடனே நாங்கள் அங்கே சென்றோம். அங்கே சென்றபின்னர் தான் எங்களுக்கு அந்த நபர் எவ்வளவு சிக்கலான இடத்தில் விழுந்திருக்கிறார் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அவர் மலை உச்சியில் இருந்து 300 அடி ஆழத்தில் விழுந்திருந்தார். அப்போதே எங்களுக்கு அவரை மீட்பது எவ்வளவு சிக்கல் என்பது புரிந்துவிட்டது. மதியம் 2.30 மணியளவில் அவரை நெருங்கியபோது அவர் ஏற்கெனவே இறந்தது எங்களுக்கு தெரிந்தது


ஆபத்தான செல்ஃபிகள் தேவைதானா?
இளைஞர்களை ஆட்கொண்டுள்ள செல்ஃபி மோகத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாகிறது. வெளிநாடுகளில் மட்டுமல்ல நம் நாட்டிலும் இதுபோன்ற செல்ஃபி சம்பவங்கள் நடந்து வருகின்றன.


செல்பி எடுப்பதால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள், உயிரிழப்புகள் நடந்து கொண்டிருந்தாலும், இளைஞர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது அதன் மோகம்.இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட், செல்பி எடுப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து உலகம் முழுவதும் ஆய்வு நடத்தியது.


உலகத்தில் சுறா தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்போரை விடவும் செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.


செல்ஃபி எடுத்து அதைச் சுடச்சுட பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்களில் போடுவது என இந்தக் கால இளைய தலைமுறையினரின் முக்கியக் கடமையாகிவிட்டது. ஒன்று எங்கு சென்றாலும், எந்த நிகழ்வாக இருந்தாலும், துக்க வீட்டில் பிணத்துடன் செல்ஃபி எடுக்கும் அளவுக்கு செல்ஃபி மேனியா இன்று வேகமாகவே பரவிவருகிறது.
செல்ஃபி மோகம்  பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது பேஸ்புக் ரீல்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ் என்று இளைஞர்களின் மோகம் சென்று கொண்டிருக்கிறது.


கிரேக்கப் புராண கதையான நாசீசஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தண்ணீரில் பிரதிபலித்த தன் உருவத்தைக் கண்டு தன்னுடைய அழகில் மயங்கி அப்படியே உறைந்துபோனவன் நாசீசஸ். தன்னைத் தவிர வேறெதையும் பற்றி யோசிக்காத சுயநலவாதிகளை இதனால்தான் ஆங்கிலத்தில் நாசீஸ்ட் என்பார்கள். செல்ஃபி மோகம் பிடித்தவர்களை உளவியலாளர்கள் நாசீஸ்ட் என்றுதான் அழைக்கிறார்கள். இந்த மோகம் தேவைதானா என்று எல்லோரும் உணர்தல் நல்லது.