பாலின சமத்துவம் உலகம் முழுவதுமே மெல்ல மெல்ல மேலோங்கி வரும் சூழலில் சிலர் சொல்லும் அரைவேக்காட்டு கருத்துகள் அதற்கு பெரும் சோதனையாக அமைந்துவிடுவதும் உண்டு.
அப்படித்தான் இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் தான் மட்டுமல்ல நிறைய இளைஞர்கள் ஏன் காதலியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவதில்லை என்பதற்கு அற்பமான விளக்கம் கூறி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
@TomHarlz இதுதான் அவரது டிக்டாக் ஹேண்டில். இதில் அவர், இளைஞர்கள் ஏன் தங்கள் கேர்ள் ப்ரெண்ட் பற்றி ஸ்டோரீஸில் போஸ்ட் செய்வதில்லை தெரியுமா? ஏனென்றால் தாங்கள் தர்மசங்கடமான நிலைமைக்கு தள்ளப்படக்கூடாது என்பதாலேயே அவ்வாறு செய்கின்றனர். ஒருவேளை நீங்கள் உங்கள் கேர்ள் ஃப்ரெண்ட் படத்தை பகிரவில்லை என்றாலும் இதுதான் காரணமாக இருக்க முடியும்.
நான் ஒருவேளை தவறான கருத்தைச் சொன்னால் நீங்கள் சுட்டிக் காட்டுங்கள். உங்கள் கண்ணுக்கு அவள் அழகாக இருக்கலாம். அவளுக்கு 10க்கு 10 மதிப்பெண் நீங்கள் கொடுக்கலாம். ஆனால் அவள் நிச்சயமாக மற்றவர்களின் கண்ணுக்கும் 10க்கு 10 பெறுபவராக தெரியமாட்டார் தானே. உங்களுக்கு இப்போது நான் சொல்ல வருவது புரிகிறதா? இந்த உண்மையை நான் சொன்னதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் பெண்களே.
இவ்வாறு அந்த இளைஞர் கூறியுள்ளார்.
அவரது வீடியோவுக்குக் கீழ் நூற்றுக் கணக்கான பின்னூட்டங்கள். அத்தனையும் அவரை வறுத்தெடுக்கும் ரகம். அதில் ஒரு பெண். ஆம் நீங்கள் சொல்வது உண்மைதான். அதனால் தான் பெண்களாகிய நாங்கள் எங்கள் படங்களையும், எங்கள் உணவையும் மட்டுமே பகிர்கிறோம். பத்துக்கு 10 கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு பெண் எனது காதலர் சாம்சங் ஃபோன் தான் வைத்துள்ளார். அதனால் நான் அவரை என்னை படம் பிடிக்க அனுமதிப்பதில்லை என்று கிண்டல் செய்துள்ளார். இப்படியாக பலரும் பலவிதமாக கருத்துகளை அந்த நபரின் டிக்டாக் வீடியோவிற்குப் பின்னூட்டமாக பதிவிட்டுள்ளனர். இணையத்தில் எது ட்ரெண்டாகும் என்பதற்கு ஓர் இலக்கணமே இல்லை என்பார்கள். அப்படியான ட்ரெண்டுக்கு இந்த டிக் டாக்கும் ஒரு சான்று. ஆனாலும் ஒரு பெண்ணை இத்தனை இழிவாக நினைக்கும் நபரின் காதலி உண்மையிலேயே துர்பாக்கியவதி என்று தான் கூற வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞரின் பார்வை இணையவெளியில் மிகப்பெரிய அளவில் வாத விவாதங்களை உண்டு செய்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இளைஞரின் பார்வையே தவறு என்று சுட்டிக்காட்டி வருகின்றனர். இன்று இது ட்ரெண்டாவது போல் நாளை இன்னொரு விஷயமும் ட்ரெண்டாகும். அப்போது நமக்கு இந்த விவாதம் பயனற்றதாகத் தெரியும். இதுதான் இணைய உலகம்.!