தாய்லாந்தில் சிங்கக்குட்டியுடன் காரில் ஒருவர் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பூமியில் மனிதர்கள், தாவரம், விலங்குகள் என பல வகையான உயிர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் விலங்குகளை எடுத்துக் கொண்டால் அதன் குணங்களை வைத்து வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என பிரிக்கப்பட்டிருப்பதை சிறுவயதில் படித்திருப்போம். சிங்கம்,புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட மிருங்கங்கள் தொடங்கி பறவைகள், நீர்வாழ் விலங்குகள் என பல வகைகள் வீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. அதுவே சில நாடுகளில் சிங்கம் தொடங்கி அனைத்து வகையான விலங்குகளும் சட்டத்திற்கு உட்பட்டு வளர்க்க அனுமதிக்கப்படுகிறது. 


இதுதொடர்பான வீடியோக்களை பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். உதாரணமாக ஆக்ரோஷமான குணம் படைத்ததாக சொல்லப்படும் சிங்கம், புலி போன்ற விலங்குகள் செல்லப்பிராணிகளாக சாதுவாக வளர்ந்து இருப்பதை பார்க்கும்போது “உன் பவர் உனக்கே தெரியலையப்பா” என கமெண்டுகள் பறக்கும். இப்படிப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 






மடமன்தோன் என்ற நபரின் பேஸ்புக் கணக்கில் இருந்துதான் இந்த வீடியோ பதிவாகியுள்ளது. அதில் காரின் பின்  இருக்கையில் சிங்கக்குட்டி அமர்ந்திருக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ கடந்த டிசம்பர் மாதம் சோன்புரி மாகாணத்தின் பாங் லாமுங் மாவட்டத்தில் உள்ள சோய் ஃபிரதம்நாக் நகரில் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த சிங்கக்குட்டி வீடியோ வைரலாக உடனடியாக அந்நாட்டின் வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். 


தாய்லாந்து நாட்டின் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புத் துறை சட்டத்தின்படி, அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பதிவு செய்து வளர்க்கலாம். இதற்காக இந்திய  மதிப்பில் ஒரு விலங்குக்கு சுமார் ரூ. 11,64,613 விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் விலங்குகளை வளர்ப்பவர்கள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்திருக்க வேண்டும். முன் அனுமதியின்றி காட்டு விலங்கை பொது வெளியில் எடுத்துச் செல்வது, அதன் இருப்பிடத்தை மாற்றுவது என்பது கூடாது. இது சட்டப்படி விலங்குகளை துன்புறுத்துவதற்கு சமமாகும். 


வீடியோவில் இருக்கும் சிங்கக்குட்டி பிறந்து 4 அல்லது 5 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் எனவும், அதன் உரிமையாளர் சவாங்ஜித் கொசூங்னெர்ன் தான் எனவும் கண்டறியப்பட்டது. ஆனால் காரை ஓட்டிச் சென்றது அவரின் நண்பரான இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரை கண்டுபிடிக்க தாய்லாந்து வனத்துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.