மாலத்தீவு அரசாங்கத்தின் "இந்தியா-விரோத நிலைப்பாடு" குறித்து கவலை தெரிவித்து, அந்நாட்டின் இரண்டு முதன்மை எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி.) மற்றும் ஜனநாயகக் கட்சி , இந்தியாவை “நீண்ட கால நட்பு நாடு” என அறிவித்தன. சமீபத்தில் மாலத்தீவு அரசு, அந்நாட்டின் துறைமுகத்தில் சீன கப்பல் ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியது, இதனை தொடர்ந்து இரு கட்சிகளும் அறிக்கை ஒன்றை வெளியிட்டன. 






புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பதவியேற்ற பிறகு பெய்ஜிங்கை தனது முதல் துறைமுகமாக மாற்றுவதற்கான சமீபத்திய முடிவு காரணமாக இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. மாலத்தீவு அதிபருக்கான முதல் துறைமுகமாக புது தில்லி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தற்போதைய அரசாங்கம், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. நீண்ட காலமாக நட்பு நாடாக இருந்து வரும் இந்தியா மாலத்திவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


எம்.பி.டி இன் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஃபயாஸ் இஸ்மாயில், பாராளுமன்ற துணை சபாநாயகர் எம்.பி. அஹமட் சலீம், ஜனநாயகக் கட்சியின் தலைவர் எம்.பி. ஹசன் லத்தீப் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எம்.பி. அலி அசிம் ஆகியோருடன் இணைந்து, பல்வேறு ஆட்சி தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது, 87 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 55 இடங்களைக் கொண்ட இரண்டு எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி விவகாரத்தில் ஒத்துழைக்க உறுதியளித்தன. மேலும் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிப்படைத்தன்மை பிரச்சனைகள் குறித்து கவலை தெரிவித்தன. முக்கியமாக நாட்டில் இருக்கும் நிதிநிலை பற்றி வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், எந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து தெளிவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் மோடி அண்மையில் தான் லட்சத்தீவு சென்றது தொடர்பான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருந்தார். இது மாலத்தீவிற்கு எதிரான பரப்புரை என அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, இனி மாலத்தீவுகளுக்கு செல்லப்போவதில்லை என பல்வேறு துறைகளை சேர்ந்த இந்திய நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதோடு, ஏற்கனவே மாலத்தீவு பயணத்திற்காக செய்து இருந்த முன்பதிவுகளையும் ரத்து செய்தனர். இதனால் மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு பெரும் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய 3 அமைச்சர்களையும் மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.


நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்கு மாலத்தீவு  சுற்றுலா தொழிற்சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்த விவகாரம் இன்னும் தனிந்தபாடில்லை.