மாலியில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 74க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் மாலி, ஆப்பிரிக்காவின் தங்க உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் மாலியில் 72.2 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது. அங்குள்ள தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்று இதனிடையே மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் ஒன்று பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இப்படியான நிலையில் இந்த சுரங்கம் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் உள்ளே இருந்த அனைவரும் மண்ணில் புதைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் வந்து சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்குப் பின் அந்நாட்டின் சுரங்கத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘சுரங்கம் இடித்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க இந்த சுரங்கத் துறையை அரசு ஒழுங்கமைக்க வேண்டும் என்ற கருத்தை தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி கரீம் பெர்தே முன்வைத்துள்ளார். இதேபோல் சுரங்கம் இடிந்து விழுந்த நேரத்தில் சுமார் 100 பேர் உள்ளே இருந்ததாக அந்த இடத்தில் இருந்த மாலி சேம்பர் ஆஃப் மைன்ஸ் தலைவர் அப்துலே போனா கூறியுள்ளார்.
சமீபகாலமாக மாலியில் நிகழும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தப்படும் நிகழ்வு அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில் இந்த சுரங்க விபத்து மேலும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேவை அதிகரித்துள்ளதால் பழைய மற்றும் கைவிடப்பட்டப்பட்ட சுரங்கங்களில் பணிகள் நடைபெற்று வருவதால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: Russia Plane Crash: போர் கைதிகளை ஏற்றி சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து! 65 பேரின் கதி என்ன? உக்ரைனில் பரபரப்பு!