இந்தியாவுக்கு தலைவலியாக மாறப்போகும் மாலத்தீவின் புதிய அதிபர்: 


இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை பேணி வந்த மாலத்தீவு அதிபர் முகமது சோலி, அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். கடும் போட்டிக்கு மத்தியில் எதிர்க்கட்சி வேட்பாளரான முகமது முய்ஜு வெற்றி பெற்றுள்ளார். முய்ஜு, 54 சதவிகித வாக்குகளை பெற்றுள்ள நிலையில், தற்போதைய அதிபர் சோலிக்கு 46 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.


மாலத்தீவு அதிபர் தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை தலைமை தாங்கி நடத்தியவர் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவரது பிரச்சாரமே, 'இந்தியாவே வெளியேறு' என்ற முழக்கத்தை மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்டது. இந்திய படைகளை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவேன் என முகமது முய்ஜு வாக்குறுதி அளித்திருந்தார்.


"இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன்"


இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முகமது முய்ஜு, "மாலத்தீவுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்றுவேன் என்ற தேர்தல் வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறேன். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குவேன். 


மக்களின் விருப்பத்திற்கு எதிராக மாலத்தீவில் இருக்கும் வெளிநாட்டு ராணுவத்திற்கு ஆதரவாக இருக்க மாட்டேன். இங்கு வெளிநாட்டு ராணுவம் இருப்பதில் விருப்பமில்லை என மக்கள் எங்களிடம் தெரிவித்துவிட்டார்கள்" என்றார்.


இந்தியாவை முன்னிலைப்படுத்தி கொள்கைகளை வகுப்பதாக அதிபர் சோலி மீது எதிர்க்கட்சிகள், தேர்தல் பிரச்சாரத்தின்போது கடும் குற்றச்சாட்டு சுமத்தின. இந்திய, மாலத்தீவு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கப்பல் கட்டுமான தளத்தை கட்டுவதற்காகவே இந்திய ராணுவம் அனுமதிக்கப்பட்டதாக சோலி விளக்கம் அளித்திருந்தார். நாட்டின் இறையாண்மை மீறப்படாது என்றும் நாட்டு மக்களுக்கு சோலி உறுதி அளித்திருந்தார். 


அதேபோல, மாலத்தீவில் எவ்வளவு இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. 
மாலத்தீவில் இந்திய ராணுவத்தை குவிப்பது தொடர்பாக இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட்டது பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுக்கப்பட்டது. அதேபோல, அதன் நோக்கம் குறித்து தொடர் கேள்வி எழுப்பப்பட்டு வந்துள்ளது.


மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்களை இந்தியா நன்கொடையாக வழங்கியிருந்தது. இந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவ வீரர்கள்தான் இயக்கி வந்தனர். அதேபோல, இயற்கை பேரிடரின்போது கடலில் சிக்கிய மக்களை காப்பாற்ற இந்திய ராணுவ வீரர்கள் பெரும் பங்காற்றினர். 


மாலத்தீவு அதிபர் தேர்தலில் தற்போது வெற்றிபெற்றுள்ள எதிர்க்கட்சி கூட்டணியான மக்கள் தேசிய காங்கிரஸ் - மாலத்தீவு முற்போக்கு கட்சி, சீனாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தது. அப்துல்லா யாமீன் ஆட்சி காலத்தில், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மாலத்தீவு கடனாக பெற்றது. தேர்தலில் முய்ஜு வெற்றிபெற்றதால் சீனாவுக்கு மட்டும் இன்றி சீன முதலீட்டாளர்களுக்கும் இது மிக பெரிய வாய்ப்பை தரும் என கூறப்படுகிறது. 


இதையும் படிக்க: Tejas Mark-1A Jets: எதிரி நாடுகளை அலறவிடும் இந்தியா..! விமானப்படைக்கு புதியதாக 97 தேஜாஸ் போர் விமானங்களை வாங்க முடிவு