Tejas Mark-1A Jets: இந்திய விமானப்படைக்கு புதியதாக 97 தேஜாஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


இந்திய விமானப்படை:


சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப்பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்திய ராணுவம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன. அந்த வகையில் தான் தற்போது, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் செலவில் விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக புதிய ஆயுத கொள்முதலை மேற்கொள்ள ராணுவம் திட்டமிட்டுள்ளது.


97 தேஜாஸ் விமானங்கள்:


புதிய ஆயுத கொள்முதல் தொடர்பாக பேசிய விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி, “60,000 கோடி ரூபாய் செலவில் 84 சுகோய்-30எம்கேஐ ஜெட் விமானங்களை மேம்படுத்துவதுடன், ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  கூடுதலாக 97 தேஜாஸ் மார்க்-1ஏ விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்திய விமானப்படை இறுதி செய்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.  புதியதாக வாங்கப்படும் 97 தேஜாஸ் மார்க்-1ஏ ஜெட் விமானங்கள் மூலம், இந்திய விமானப்படை வாங்கும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 180 ஆக உயரும். முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் MK-1A ஜெட் விமானங்களை வாங்குவதற்காக, அரசு நடத்தும் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாட்டின் விமானப்படை மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது.


அடுத்து என்ன?


தேஜாஸ் போர் விமானங்கள் ஆண்டுக்கு 15 ஐ மட்டுமே HAL உற்பத்தி செய்ய முடியும் என்பதால், வழங்குவதற்கான காலக்கெடுவை விரைவுபடுத்த, தனியார் துறையுடன் இணைந்து உற்பத்தி வேகம் அதிகரிக்கப்படும் என இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். இதனிடையே, அடுத்த ஆண்டு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதில், இந்திய விமானப்படைக்கு 66 இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் உட்பட மொத்தம், 156 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஏற்கனவே 10 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தேஜாஸ் MK-1A சிறப்பம்சங்கள்:


தேஜாஸ் என்பது ஒற்றை இன்ஜின் கொண்ட பல்வேறு சூழல்களில் செயல்படக் கூடிய போர் விமானம்.  மோசமான வானில சூழலில் கூட திறம்பட செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு, கடல்சார் உளவு மற்றும் வேலைநிறுத்தப் பாத்திரங்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது வான் பாதுகாப்பு, கடல்சார் உளவு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


எதிர்பார்ப்பை கிளப்பும் தேஜாஸ் Mark-2:


தேஜாஸ் MK-1A விமானங்களின் கொள்முதல் என்பது எதிர்காலத்தில் வாங்க உள்ள தேஜாஸ் மார்க் - 2 விமானங்களுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் தேஜாஸ் மார்க் 2 மாடலின் முதல் விமானம், 2025ம் ஆண்டு தயாராகும் என தெரிவிவிக்கப்பட்டுள்ளது.