மாலத்தீவின் தலைநகரான மாலே தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அமைச்சரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாலத்தீவின் தலைநகரான மாலே தெருவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அலி சோலிஹ் தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்த வந்த நபர் தனது கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியை கொண்டு அமைச்சரை நான்கு முறை குத்த முயற்சி செய்தார். அவரது குறி முழுவதும் அமைச்சரின் கழுத்திலேயே தான் இருந்தது.
இருப்பினும் சுதாரித்து கொண்ட அமைச்சர் சோலி, உடனடியாக தனது கைகளை கொண்டு தாக்குதலை தடுக்க முயற்சி செய்தார். இதனால் அவரது கையில் கத்திக்குத்து ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தனது ஸ்கூட்டரை அங்கேயே விட்டு ஓடினார். தாக்குதல் நடத்தியவர் பின்னர் கைது செய்யப்பட்டார். ஹுல்ஹுமாலேயில் உள்ள மருத்துவமனையில் அமைச்சர் சோலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோலி சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார். அவர் ஜனாதிபதி இப்ராகிம் சோலியின் ஆளும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (MDP) கூட்டணிக் கட்சியான ஜும்ஹூரி கட்சியின் (JP) செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.
கடந்த மே 2021 ம் தேதி மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் தாக்கப்பட்டார். நஷீத் கார் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டு தாக்குதல் காரர்கள் வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த நஷீத் விமானம் மூலம் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாகவே மாலத்தீவின் பயங்கரவாதிகளின் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தையும் அரசு முன்னெடுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பல இடங்களில் பயங்கரவாதச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.