கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் இந்தியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டை விதித்து நோய் பரவும் வேகத்தை கட்டுபடுத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 


இந்தச் சூழலில் மலேசியாவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு வீடுகளில் வெள்ளை கொடி ஏற்றுவது மிகவும் அதிகரித்து வருகிறது. வெள்ளை கொடி எதற்கு ஏற்றப்படுகிறது? அதன் பயன் என்ன?


 எதற்கு வெள்ளை கொடி?


மலேசியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக அந்நாட்டு மக்கள் மிகவும் மோசமான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் அத்தியவாசிய உணவு, பால் போன்ற விஷயங்களை வாங்க கூட அவர்களிடம் பணம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த மாதிரி உணவு தேவை உள்ள மக்கள் தங்களுடைய வீட்டிற்கு வெளியே வெள்ளை கொடியை ஏற்றுகின்றனர். இதை பார்க்கும் மற்ற நபர்கள் அவர்களுக்கு வந்து தேவையான உதவியை செய்து வருகின்றனர். 




இதற்காக மலேசியாவில் சாம்பல் என்ற அவசர உதவி செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் மலேசிய வரைப்படத்தை வைத்து எந்தெந்த இடங்களில் வெள்ளை கொடி ஏற்றப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதை வைத்து உதவி தேவையுள்ள நபர்களை அடைந்து அவர்களுக்கும் உதவும் முறை நடைபெற்று வருகிறது. 


வெள்ளை கொடியை போல் வேறு கொடிகள் ஏற்றப்படுகிறதா?


மலேசியாவில் வெள்ளை கொடிகளை போல் ஒரு சில இடங்களில் அரசிற்கு எதிராக கருப்பு கொடியும் ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அந்நாட்டு பிரதமர் யாஷின் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கருப்பு கொடியை ஏற்றுவதாக கூறப்படுகிறது. அதேபோல் கொரோனா காலத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் விலங்குகள் உதவ சிவப்பு கொடி ஏற்றும் பழக்கமும் அங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த வழக்கத்தை அப்பகுதியில் உள்ள விலங்கு நல ஆர்வலர் தொண்டு நிறுவனம் ஒன்று தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. 




எதற்காக வெள்ளை நிறம்?


பொதுவாக உலகளவில் வெள்ளை நிற கொடி என்பது சமாதானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் தற்போது இம்முறை இந்தக் கொடி மக்களின் இன்னல்களை போக்க உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்க கண்டத்தில் உள்ள எல் சல்வேடார், கௌதமாலா, ஹாண்டூரஸ் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளை கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. அவை மக்களின் இன்னல்களை தெரிவிக்க விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:ஹைதி அதிபர் மோசே படுகொலை :மனைவிக்கு தீவிர சிகிச்சை..!