அமெரிக்கா கண்டத்தில் இருக்கும் தீவு நாடான ஹைதியில் நீண்ட நாட்களாக கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. ஹைதி நாட்டை கடந்த 2010ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அப்போது முதல் அந்நாட்டில் பொருளாதார நிலை மிகவும் மோசம் அடைந்தது. 2016ஆம் ஆண்டும் அங்கு மேத்யூ என்ற சூறாவளி புயல் தாக்கியது. இதன் காரணமாக அந்நாட்டில் பல்வேறு மக்கள் பாதிப்பு அடைந்தனர். அந்த நாட்டில் பணவீக்கமும் மிகவும் கடுமையாக உயர்ந்தது. இதனால் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் சூழல் உருவானது. உணவு, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்களால் வாங்க முடியாத சூழலும் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் வன்முறை சம்பவங்கள், திருட்டு சம்பவங்கள் மற்றும் குழுவாக வன்முறையில் ஈடுபடுவது வழக்கமாக அமைந்தது. 2017-ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற ஜோவனல் மோசே சர்வாதிகாரியாக ஆட்சி செய்து வந்தார். 2019-ஆம் ஆண்டு அந்தநாட்டின் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்தது. எனினும் அங்கு நிலவிய வன்முறை மற்றும் கிளர்ச்சியாளர்களின் செயலை சுட்டிக்காட்டி தேர்தல் நடத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் மீது எதிர்க்கட்சிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.




இந்நிலையில் நேற்று காலை ஹைதி நாட்டின் அதிபர் தன்னுடைய வீட்டில் கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். அவருடைய மனைவி மார்ட்டின் மோசே காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டின் தற்காலிக பிரதமர் கிளாடே ஜோசப், “அதிபர் மோசே அதிகாலை அவருடைய இல்லத்தில் சுடப்பட்டு இறந்துள்ளார். அவருடைய மனைவி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தங்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார். 


இந்தச் சூழலில் அதிபர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேரை சுட்டு உள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் பாதுகாப்பில் இருந்த காவலர்களையும் அவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர். முன்னதாக அதிபரை கொலை செய்ய வந்தபோது அந்த காவல்துறையினரை அவர்கள் பிணை கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். 




நீண்ட நாட்களாக சண்டை மற்றும் வன்முறையை சந்தித்து வந்த ஹைதி நாட்டில் தற்போது அதிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது என கண்டித்துள்ளார்.


மேலும் படிக்க: 100 நாட்களுக்குப் பின் எவர் கிவன் கப்பலை விடுவித்தது சூயஸ் கால்வாய் ஆணையம்..!