மாலவி துணை அதிபர் சௌலோஸ் சிலிமா மற்றும் ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற விமானம் காணாமல் போனதை அடுத்து, வடக்கு மாலவியில் உள்ள மலை காடுகளில் தேடுதல் மற்றும் மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவியின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டின் துணை அதிபர் சவுலோஸ் கிளாஸ் சிலிமா மற்றும் அவரதுடன் பயணித்த 9 பேரை ஏற்றிச் சென்ற விமானம் காணாமல் போனதாக நேற்று தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அந்த அறிக்கையில், “ரேடாரில் இருந்து விமானம் காணாமல் போனதில் இருந்து விமானத்தை தொடர்புகொள்ள விமான அதிகாரிகள் எடுத்த அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், துணை அதிபர் காணாமல் போனது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காணாமல்போன விமானம்:


துணை அதிபர் சவுலோஸ் சிலிமா (51) ராணுவ விமானத்தில் பயணித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது செய்தியில் வெளியிட்டுள்ளது. இந்த விமானம் (நேற்று) திங்கள்கிழமை காலை மாலவியின் தலைநகரான லிலோக்வேயில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா மற்றும் அவரது 9 பேர் பயணித்துள்ளனர். விமானம் தலைநகர் லிலோங்வேயில் இருந்து காலை 9:17 மணிக்கு புறப்பட்டு, சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு சுமார் 370 கிமீ (230 மைல்) தொலைவில் உள்ள Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே, இந்த விமானத்தின் தொடர்புகள் அனைத்தும் துண்டாகி, காணாமல் போனது. 


இறந்துவிட்டாரா மாலவி துணை அதிபர்..? 


விமானத்தை தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில், தேடுதல் மற்றும் மீட்பு பணியை உடனே தொடரும்படி மாலவி அதிபர் உத்தரவிட்டார்.  மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, நோர்வே மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தேடுதல் நடவடிக்கைக்கு உதவி வழங்கியுள்ளதாகவும், "சிறப்பு தொழில்நுட்பங்களை" வழங்கியுள்ளதாகவும் மாலவி அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்தார். இதையடுத்து, காணாமல்போன விமானத்தை கண்காணிக்க முழு முயற்சித்து வருகிறது. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் பலன் அளிக்கவில்லை. இந்த விபத்துக்கு பிறகு, மாலவி அதிபர் லாசரஸ் சக்வேரா தனது பஹாமாஸ் பயணத்தை ரத்து செய்துள்ளார்.


இதுகுறித்து ஆப்பிரிக்க பத்திரிகையாளர் ஹோப்வெல் கூறுகையில், “மாலவியின் துணை ஜனாதிபதி டாக்டர் சௌலோஸ் சிலிமாவை ஏற்றிச் சென்ற காணாமல் போன இராணுவ விமானத்தில் யாரேனும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று மாலவி அரசாங்கத்தின் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.






இதையடுத்து, மாலவியில் இன்று மாலை அமைச்சரவை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.” என்று தெரிவித்துள்ளார். 


மாலவி துணை அதிபட் சிலிமா, Mzuzu (ம்ஜூஜூ) க்கு கிழக்கே உள்ள சிஜெரே கிராமத்தில் முன்னாள் நீதி அமைச்சரும் அட்டர்னி ஜெனரலுமான ரால்ப் கசம்பரா வின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இருந்தார்.