போதை காளான் ஆன மேஜிக் மஷ்ரூம் பயன்படுத்துவதால் மூளை இலகுவாகிறது என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மன அழுத்தத்திற்கு கொடுக்கப்படும் சிகிச்சைகளில் பயன்படுத்தலாம் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. வனப்பகுதிகளில் இயற்கையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை காளானை தான்  போதைக் காளான் என்கின்றனர். ''சிலோசைப்பின்'' என்கிற போதை தரும் வேதிபொருள் இந்த வகை காளான்களில் இருப்பதால் கறுப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது போதைக் காளான். இதனை சாப்பிடுபவர்களுக்கு போதை 8 மணிநேரம் வரை நீடித்திருக்கும் என கூறப்படுகிறது.


உளவியல் சார்ந்த கூறுகள் இந்த மேஜிக் மஷ்ரூமில் இருப்பதால் அதனை பயன்படுத்துவதன் மூலம், மன அழுத்த நோயாளிகளின் மூளையை பரந்த நிலையில் சிந்திக்க வைக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது. பொதுவாக பயன்படுத்தப்படும் ஆன்டி டிப்ரஷன் மருந்துகளை போல அல்லாமல் இது வேறு விதமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.



பொதுவாக மன அழுத்தத்தில் உள்ளவர்களின் மூளை செயல்பாடுகள் இங்கும் அங்குமாக, எதிர்மறை எண்ணங்களுடன், பெரும் மாற்றங்களுடன் காணப்படும். அதனை சீராக்குவதில் சாதாரன மன அழுத்த மருந்துகள் செய்ய முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறுகிறது. மனநோய் ஆராய்ச்சிக்கான இம்பீரியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் டேவிட் நட் பேசுகையில், "சைலோசைபின் வழக்கமான ஆண்டிடிரஸன்ஸிலிருந்து வேறு விதமாக செயல்படுவதால் இந்த கண்டுபிடிப்பு மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. மூளையை மிகவும் இலகுவாக மாற்றுகிறது, மேலும் எதிர்மறை சிந்தனையில் வெளியே கொண்டு வருகிறது, மனச்சோர்வு இல்லாமல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது எங்களுடைய ஆரம்ப நிலை கண்டுபிடிப்புதான் என்றாலும், மன அழுத்தத்தில் இருந்து வெளியில் வர, தீர்க்கமான மாற்று அணுகுமுறையாக இது இருக்கும் என்று தெரிகிறது.



இதற்கு முன் சில மருந்துகளை பரிசோதனை செய்தபோது அவை இரு வாரங்களுக்கு பிறகு வேறு சில தாக்கங்களை கொடுத்தன, ஆனால் இது பயன்படுத்தி சில வாரங்கள் ஆன பின்பும் அதே போன்று மனதை ஒரு நிலை படுத்தி வைத்திருக்கிறது", என்றார். லண்டன் இம்பீரியல் கல்லூரியின் மனநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைமையில், மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறும் சுமார் 60 பேரின் மூளை ஸ்கேன் பகுப்பாய்வுகளிற்கு பிறகுதான் இந்த கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில்தான் இந்த மருந்து உடனடி மாற்றங்களை கொண்டுவருவது மட்டும் அல்லாமல், மூன்று வாரங்கள் கழித்தும் செயல்படுவது தெரிய வந்தது. இந்த முறை சிகிச்சைகள் பலரால் ஊக்குவிக்கப்படும் அதே வேளையில் இதனை தன்னிச்சையாக யாரும் எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். மன அழுத்தத்திற்கான மருந்துகள் மிகவும் வீரியம் வாய்ந்தவை, எதுவாக இருந்தாலும் முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே இதனை பயன்படுத்தும் நிலை வரும் என கூறப்பட்டுள்ளது.