குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம்.


கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரின் நாடாளுமன்றம், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ரசாயனம் கொடுத்து அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டத்தை தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு சில அமைப்புகள் பெரியளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


ஆண்மை நீக்கம்: 


28 மில்லியன் (2 கோடியே 80 லட்சம்) மக்கள்தொகை கொண்ட இந்திய பெருங்கடலில் உள்ள இந்த மடகாஸ்கர் தீவின் நாடாளுமன்றம், கடந்த பிப்ரவரி 2ம் தேதி சட்டத்தை நிறைவேற்றியது. இதையடுத்து, செனட் கடந்த வாரம் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது இப்போது உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அதிபர் ஆண்ட்ரெஸ் ரஜோலினாவால் சட்டமாக கையெழுத்திடப்பட்டது. 


குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இது அவசியமான நடவடிக்கை என்றி நீதி அமைச்சர் லாண்டி ம்போலாட்டியான ரண்ட்ரிமானந்தேசோவா கூறினார். இதுகுறித்து பேசிய அவர், “கடந்த 2023ம் ஆண்டில் 600 சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குகளும், இந்த ஆண்டு 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


சட்டத்தின் விதிகளின்படி,10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கப்படும்.  அதே நேரத்தில், 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வன்கொடுமை செய்யப்பட்டால்,குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை அல்லது ரசாயன முறை மூலம் தண்டிக்கப்படுவார்கள். இது தவிர 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தால், ரசாயன முறை மூலம் காஸ்ட்ரேஷன் தண்டை விதிக்கப்படும்” என்றார். 


கெமிக்கல் காஸ்ட்ரேஷன் என்பது ஹார்மோன் சுரப்பைத் தடுக்கவும், பாலியல் ஆசையைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகும். 






கலிஃபோர்னியா மற்றும் புளோரிடா உட்பட பல நாடுகளும் சில அமெரிக்க மாகாணங்களிலும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ரசாயன காஸ்ட்ரேஷன் வழங்க அனுமதிக்கின்றன. ஆனால் தண்டனையாக அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்குவது அரிது. இப்படியாக சூழ்நிலையில், இப்படியான தண்டனையை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம். 


மடகாஸ்கரின் இந்த புதிய சட்டம் மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இது மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான தண்டனை என்று கூறியது. இது குறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியதாவது, “இந்த சட்டம் பெடோபிலியா (குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு) பிரச்சனையை தீர்க்காது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அன்டனானரிவோவை (மடகாஸ்கரின் தலைநகரம்) முன்மொழியப்பட்ட சட்டத்தை நீக்க வேண்டும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுக்கும்” என்று கூறியது.