குழந்தைகள் மீது பாலியல் வன்முறை நடத்திய குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதால் ஹங்கேரி அதிபர் கத்தலின் நோவாக் ( Katalin Novak ) பதவி விலகியுள்ளார்.
ஹங்கேரியில் அரசு நடத்தி வரும் சிறார் இல்லத்தில், அங்குள்ள குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை பிரச்னை இருந்துள்ளது. இதை மறைக்க உதவிய நபருக்கு அதிபர் அதிகாரத்தின் அடிப்படையில், கடந்த 2023 ஏப்ரல் மாதம் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது, இது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. எதிர்க்கட்சியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
”நான் தவறு செய்து விட்டேன்” - கத்தலின் நோவாக்
இது தொடர்பாக கத்தலின் நோவாக் தொலைக்காட்சி வழியாக ஆற்றிய உரையில்,” நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். பாலியல் குற்றத்தை மறைத்தவருக்கு பொது மன்னிப்பு வழங்கியது என்னுடைய தவறு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் உடன் நிற்கவில்லை என்று நினைக்கின்றனர். ஆனால், எப்போதும் அப்படிதான் இருந்திருக்கிறேன். இருப்பேன். நான் குழந்தைகள் நலனுக்காக இனியும் குரல் கொடுப்பேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கத்தலின் நோவக் (46), 2022-ம் ஆண்டு ஹங்கேரியின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார். அரசு நடத்தும் சிறார் இல்லத்தில், சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. இது தொடர்பான வழக்கில் முன்னாள் துணை இயக்குநர் கைது செய்யப்பட்டார். அவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் முன்னாள் துணை இயக்குநருக்கு அதிபர் பொது மன்னிப்பு வழங்கி ஆணை பிறப்பித்தார்.
கத்தலின் நோவாக்-வின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், நாடு முழுவதும் அதிபரின் முடிவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கத்தலின் நோவாக், கத்தார் நாட்டிற்கு சென்றிருந்தார். உலக வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் கஜகஸ்தான் - ஹங்கேரியா இடையே நடக்கும் போட்டியைக் காண சென்றிருந்ததார். இது முடிந்து உடனடியாக நாடு திரும்பியவர், பதவி விலகுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கத்தலின் நோவாக் பதவி விலகலைத் தொடர்ந்து, சட்ட அமைச்சர் ஜூடிட் வர்காவும் ( Judit Varga) பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.