உலகம் முழுவதும் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த அதானி தற்போது சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளார். மேலும் ஆசிய கண்டத்தில் 2-வது பெரிய பணக்காரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்தச் சூழலில் ஆசிய கண்டத்தில் டாப்-5 பெரிய பணக்காரர்கள் யார் யார்?
5. காலின் ஹூவாங் சேங்:
சீனாவில் மிகப் பெரிய இ வர்த்தக நிறுவனமான பின் டூடூ என்ற நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். அத்துடன் ஆன்லைன் கேமிங் தளமான ஷின்யோடி என்ற ஒன்றையும் இவர் நிறுவனம் தயாரித்தது. 2019-ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் எங்கோ இருந்த இவர் படிப்படியாக வேகமாக உயர்ந்து தற்போது ஆசிய அளவில் 5-வது பணக்காரர் என்ற இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 55 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
4. மா ஹூடெங்:
இவர் சீனாவின் இணையதள நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் என்பதன் தலைவராக இருந்து வருகிறார். இவர் சீனாவின் இரண்டாவது பெரிய பணக்காரர். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 65.8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
3. ஷோங் சான்சான்:
சீனாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஷோங் சான்சான் தான். இவர் சீனாவில் நோங்ஃபூ ஸ்பிரிங் என்ற பாட்டில் குடிநீர் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். 2020ஆண்டில் அசுர வளர்ச்சி கண்ட இவர் சீனாவில் முதல் இடத்தையும் ஆசியாவில் 2 இடத்தையும் பிடித்தார். தற்போது இவரை அதானி பின்னுக்கு தள்ளியுள்ளார். ஷோங் சான்சான் சொத்து மதிப்பு 66 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளன.
2. கவுதம் அதானி:
இந்தப் பட்டியலில் சமீபத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் கவுதம் அதானி. இவர் அதானி குழுமம் என்ற மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை நடத்திவருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 67 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
1. முகேஷ் அம்பானி:
இந்தப் பட்டியலில் அதிகளவில் சீன பணக்காரர்கள் இருந்தாலும் அவர்களை பின்னுக்குத் தள்ளி நீண்ட நாட்களாக முதல் இடத்தில் உள்ளவர் அம்பானிதான். ரிலையன்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவராக உள்ள அம்பானி ஆசிய அளவில் நம்பர் ஒன் பணக்காரராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு 84 பில்லியன் டாலர் ஆக இருந்த இவரது சொத்து மதிப்பு தற்போது சற்று குறைந்துள்ளது. எனினும் அவர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 76.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.