Luna 25 Vs Chandrayaan 3: நிலவின் தென்  துருவத்தில் தரையிறங்கிய பெருமையைப் பெற இந்தியாவின் சந்திரயான்-3, ரஷ்யாவின் லூனா-25 இரண்டும் போட்டியிடுகின்றன. லூனா-25, சந்திரயான்-3யை முந்த வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.


சந்திரயான் 3:


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோ தரப்பில் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், நேற்று முக்கியமான கட்டத்தை கடந்தது. அதாவது சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து, லேண்டர் கருவியான விக்ரம் நேற்று தனியாக பிரிந்தது. சரியாக ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கி ஆய்வு பணிகளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


லூனா 25 விண்கலம்:


இதற்கிடையே,  இந்தியாவின் சந்திரயானுக்கு போட்டியாக லூனா 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா ஆகஸ்ட் 11-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. நிலவில் இருக்கும் நீர்த்தேக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக லூனா 25 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. மாஸ்கோவிற்கு கிழக்கே 3,450 மைல்கள் (5,550 கிமீ) தொலைவில் அமைந்துள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் 2.1 வி ராக்கெட் லூனா-25 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. கடந்த 1976 ஆம் ஆண்டு ரஷ்யா, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக  லூனா 24 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதற்கு பின் 47 ஆண்டுகள் கடந்து லூனா 25 ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.


லூனா-25, தோராயமாக சிறிய காரின் அளவு இருக்கும், சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருட காலம் வரை செயல்படுவதை நோக்கமாக கொண்டுள்ளது. லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. நிலவின் நீள்வட்டப்பாதையில் சுற்றும் லூனா 25 படிப்படியாக அதன் சுற்றுப்பாதை தூரத்தை குறைத்து, வரும் 21 – 23 ஆம் தேதிக்குள் நிலவில் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


கடும் போட்டியில்  இந்திய-ரஷ்ய விண்கலங்கள்:


இந்தியாவின் சந்திராயான்3 மற்றும் ரஷ்யாவின் லூனா25 இரண்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நிலவின் தென்  துருவத்தில் தரையிறங்கிய பெருமையைப் பெற இந்தியாவின் சந்திரயான்-3, ரஷ்யாவின் லூனா-25 இரண்டும் போட்டியிடுகின்றன. லூனா-25, சந்திரயான்-3யை முந்த வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.  நிலவின் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமான soft landing மைல்கல்லை அடைய ரஷ்ய மற்றும் இந்திய இலக்காக கொண்டுள்ளது. சந்திரயானை விட வேகமாக நிலவை நெருங்கி உள்ளது லூனா-25. எனவே, சந்திரயானுக்கு முன்பாகவே வருகிற 21ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.  ரஷ்யாவின் லூனா-25 ஏவப்பட்ட 11 நாட்களின்  தரையிறங்குகிறது.


வேறுபாடு:


லூனா-25 ஐந்து நாட்கள் சந்திரனை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு, அதை  தொடர்ந்து 5-7 நாட்கள் சந்திரனின் சுற்றுப்பாதையில் பயணித்து  நிலவில் தரையிறங்கும். ஆனால், சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதற்கு கிட்டதட்ட 40 நாட்கள் ஆகிறது. சந்திரயான்3 எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அதிக நாட்கள் பயணிப்பதாக இஸ்ரோ தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. அதேபோல, சந்திரயான் -3, லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் இரண்டையும் சுமந்து செல்கிறது.  ரஷ்யாவின் லூனா 25 ஒரு லேண்டர் மிஷன் மட்டுமே சுமந்து செல்கிறது, அதில் ரோவர் இல்லை. விக்ரம் லேண்டர் 1,745 கிலோ எடையும், லூனா 25 லேண்டர் 800 கிலோ எடையும் கொண்டது. விக்ரமின் எதிர்பார்க்கப்படும் பணிக்காலம் 14 நாட்கள் ஆகும். அதே சமயம் லூனா 25 ஒரு வருட காலம் ஆய்வு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.