மலேசியா நெடுஞ்சாலையில் விமானம் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


மலேசியாவில் நெடுஞ்சாலையில் சிறியரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. உடனே விமானம் தீப்பிடித்து எறிந்து அப்பகுதியே கரும்புகைமண்டலமாக மாறியது. இதை நெடுஞ்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த காரில் இருந்த டேஷ்கேமால் படம்பிடிக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சி இப்போது வெளியாகியுள்ளது. 


இன்று நடந்த இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 பேரும், தரையில் இருந்த இரண்டு வாகன ஓட்டிகளும் என 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.






இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இப்போதைக்கு, விமான விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம். அவ்வழியாகச் சென்ற இரு வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். காரில் இருந்த ஒருவரும், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரும் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானத்தில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்தனர். மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். 


 






மத்திய பகாங் மாநிலத்தில் வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜோஹரி ஹருன் கொல்லப்பட்ட விமானப் பயணிகளில் ஒருவர் என போலீசார் தெரிவிக்கின்றனர். 


விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 6 பயணிகளும் இரண்டு விமான ஊழியர்களும் இருந்ததாக மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


“விமானம் வடக்கு ரிசார்ட் தீவான லங்காவியில் இருந்து புறப்பட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு மேற்கே உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் தாறுமாறாக பறந்ததை நான் பார்த்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு நான் ஒரு பெரிய சத்தத்தை கேட்டேன்” என மலேசிய விமானப்படையின் முன்னாள் உறுப்பினர் முகமது சியாமி முகமட் ஹாஷிம் செய்தி நிறுவனமான AFP-க்கு தெரிவித்தார்.