California Los Angeles Wildfires: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டு தீயால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் எரிந்து நாசமடைந்துள்ளது.


லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டு தீ:


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பல காட்டுத் தீ தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல் எரிந்து வருவதால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். முழு சுற்றுப்புறங்களையும் தன்னுள் அடக்கி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்த காட்டு தி நாசமாக்கியுள்ளது. பளபளக்கும் நகரம்,  ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்களின் தாயகம் மற்றும் அமெரிக்கத் திரையுலகின் தாயகம் என வர்ணிக்கப்படும் லாச் ஏஞ்சல்ஸ் தற்போது பொங்கி எழும் தீயினால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கிறது. 



லாஸ் ஏஞ்சல்ஸின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தீப்பிழம்புகள் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு மத்தியில், பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன, மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற தீப்பிழம்புகளை எவ்வாறு எதிர்கொண்டனர் போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.


17,234 ஏக்கர் நிலம் நாசம்:


அந்த வகையான வீடியோவில், “லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நார்த் ரஸ்டிக் கேன்யனில் உள்ள தங்கள் வீட்டைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருந்த இரண்டு நண்பர்கள், பாலிசேட்ஸ் காட்டுத் தீயில் அனைத்தையும் இழந்துள்ளனர். வீட்டை தீப்பிடிக்க விடாமல் தடுக்க பல முயற்சிகள் செய்த போதிலும், இறுதியில் உயிரை காப்பாற்றிக் கொண்டு அங்கிருந்து ஓட வேண்டியிருந்தது.  லாஸ் ஏஞ்சல்ஸின் மேற்குப் பகுதியில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் அருகே செவ்வாய்கிழமை காலை ஏற்பட்ட பாலிசேட்ஸ் தீ, தற்போது மிகப்பெரிய தீயாக உள்ளது. அந்த காட்டு தீ இதுவரை 17,234 ஏக்கர் நிலத்தை அழித்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதில் சிக்கி வீடு ஒன்று பற்றி எரிவது நரகத்தை போன்று காட்சியளிக்கிறது.






நரகமாய் காட்சியளிக்கும் நகரம்:


பாலிசேட்ஸ் தீயைத் தவிர, லாஸ் ஏஞ்சல்ஸில் மேலும் நான்கு பகுதிகளில் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. இதில் ஈடன், ஹர்ஸ்ட், லிடியா மற்றும் சன்செட் ஆகியவை அடங்கும்.






லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் கூற்றுப்படி, பசடேனாவுக்கு அருகில் வெடித்த ஈடன் காட்டு தி, 10,600 ஏக்கரை எரித்து நாசமாக்கி தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் எரியும் சிறிய தீயான ஹர்ஸ்ட் 855 ஏக்கரையும், லிடியா 348 ஏக்கரையும்,  ஹாலிவுட் ஹில்ஸ் அருகே தொடங்கிய சன்செட் இதுவரை 42 ஏக்கரையும் எரித்து நாசமாக்கியுள்ளது.






மற்றொரு வீடியோவில் கொளுந்து விட்டு எரியும் தீ, பல அடி உயரத்திற்கு மேலே எழுந்து நிற்கும் புகைக்கு மத்தியில் சூரிய உதயம் ஏற்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை பார்க்கும் போது, ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் பேரழிவிற்கு பிறகான உலகம் போன்று தோன்றுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.