`லோன்லீ பிளானட்’ இணையதளம் 2022ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல வேண்டிய முக்கிய நாடுகள், நகரங்கள், பகுதிகள் ஆகியவற்றின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, பலரும் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வருவதால், டாப் 10 இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியல் இதோ...
10. எகிப்து
வட ஆப்பிரிக்க நாடான எகிப்தில் உலகின் 7 அதிசயங்களுள் ஒன்றான கீஸா பிரமிட்கள் இருக்கின்றன. மேலும் எகிப்து நாடு அதன் பழைமையான நாகரிகம், அழகான கடற்கரைகள், கடல்கள், ஆற்றுப் பயணங்கள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றவை.
09. மலவி
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் சுற்றிலும் நாடுகளால் சூழப்பட்ட நாடான மலவி அதன் நீர்க்குளங்களுக்காகப் புகழ்பெற்ற நாடு. அங்குள்ள லேக் மலவி தேசிய பூங்கா அங்கு வாழும் பல்வேறு வகையிலான கானுயிர்களுக்காகப் போற்றப்படுகிறது.
08. நேபாளம்
இமாலய மலையின் உயரமான சிகரம் எவரெஸ்ட் இருக்கும் நாடு நேபாள். இந்த நாடு அதன் பழைமையான கலாச்சாரம், பாரம்பரிய கட்டிடமுறை ஆகியவற்றிற்காக விரும்பப்படுகிறது. நேபாள் நாட்டில் அழகான மடாலயங்களும், வித்தியாசமான மலையேறும் பயணங்களும், மத நல்லிணக்கமும் மிகுதியாகவே உண்டு.
07. ஓமன்
மேற்கு ஆசியாவின் அரேபிர தீபகற்பத்தில் உள்ள ஓமன் சுல்தானேட் நாட்டில் தனித்துவமான பாரம்பரியம் கொண்ட கோட்டைகளும் அரண்மனைகளும் உண்டு. மேலும் இந்நாடு பாலைவனத்தில் மேற்கொள்ளும் விவசாயம், பல்வேறு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்கள் ஆகியவையும் உண்டு.
06. அங்குய்லியா
கரீபியன் தீவுகளில் அமைந்திருக்கிறது பிரிட்டிஷ் நாட்டிற்குச் சொந்தமான அங்குய்லியா தீவு. இங்கு பல சிறிய தீவுகளும், கொஞ்சம் பெரிதான ஒரு தீவும் உள்ளது. இங்கு கடற்கரைகள், உணவு வகைகள் ஆகியவை பிரசித்தம்.
05. ஸ்லோவெனியா
மத்திய ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவெனியா நாடு அங்குள்ள மலைகள், ரிசார்ட்கள், குளங்கள் ஆகியவற்றிற்காக விரும்பப்படுகின்றன. ஸ்லோவாக் கலாச்சார வாழ்க்கையை இங்குள்ள மக்கள் வாழ்வதால், இங்கு பசுமை விரும்பும் மக்கள் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கலாம்.
4. பெலிஸ்
மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள பெலிஸ் நாடு அதன் கானுயிர் பாதுகாப்புக்காக அறியப்பட்ட ஒன்று. அங்கு ஸ்கூபா டைவிங், காட்டு வழிப்பயணம் ஆகியவற்றிற்கும், அதன் கலாச்சார அனுபவத்திற்கும் மக்கள் விரும்பும் தலமாக இருக்கிறது.
3. மொரீஷியஸ்
இந்தியப் பெருங்கடலில் உள்ள மொரீஷியஸ் தீவில் கடற்கரைகள், மலைகள் ஆகியவற்றோடு பிளாக் ரிவர் கார்ஜஸ் தேசிய பூங்கா, அதன் மழை, நீர் வீழ்ச்சிகள், மலையேற்றப் பயணங்கள், கானுயிர் ஆகியவற்றிற்காகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது.
2. நார்வே
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம்பெற்றுள்ள நார்வே நாட்டில் பசுமை டெக்னாலஜி, மக்களின் சமூக கலாச்சார முன்னெடுப்புகள் ஆகியவை சிறந்தவையாக கருதப்படுகின்றன. இங்கு மலைகளும், பனிப்பாறைகளும் அதிகளவில் உண்டு.
1. குக் தீவுகள்
தெற்கு பசிஃபிக் பகுதியில் உள்ள குக் தீவுகள் சாகசப் பயணங்களோடு, கலாச்சாரத் தொடர்புகள், சுவையான உணவுகள் ஆகியவற்றையும் அனுபவித்து மகிழலாம்.