லண்டனில் மெட்ரோ ட்யூப்களில் பயணிக்கும் பயணிகள் திடீரென ஒரு நாள் கால்சட்டை அணியாமல் மெட்ரோ ட்யூப்களில் ஏறி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். அதுவும் குறிப்பாக கடந்த ஆண்டு திறக்கப்பட்ட எலிசபெத் லைணில் பயணம் செய்யும் பயணிகள் மட்டும் இவ்வாறு மெட்ரோவில் காட்சியளித்தனர். இது என்னடா பகீர் ட்ரெண்டா இருக்கு என யோசிப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த கால்சட்டையின்றி ட்யூப் சவாரி செய்யும் தினம் அனுசரிக்கப்படுகிறது என்பது கூடுதல் அதிர்ச்சியான செய்தி.


சுரங்கப்பாதை ரயில்களில் பயணிகள் தங்கள் மேல் பகுதியில் தொழில்முறை ஆடைகளுடன் காணப்படுகிறார்கள், ஆனால் கீழ்ப்பகுதியில் அவர்கள் ஜட்டி போன்ற உள்ளாடைகள் மட்டுமே அணிந்து , ஷூ மற்றும் சாக்ஸுடன் காணப்படுகிறார்கள்.


திடீரென இப்படிப் பயணம் செய்வதற்கான காரணம் என்ன?
கால்சட்டை அணியாத டியூப் சவாரி என்பது இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் காமிக் ஆர்டிஸ்ட்களின் கலைக் குழுவான இம்ப்ரூவ் எவ்ரிவேர் மூலம் இது தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நியூயார்க் மெட்ரோக்களில் ஒவ்வொரு நிலையத்திலும் தொடர்ந்து ஏழு நிறுத்தங்களில் ரயிலில் ஏறும்போது ஒருவரையொருவர் பார்க்காதது போல் பாசாங்கு செய்யும் ஏழு பேரை உள்ளடக்கிய ஒரு எளிய நடைமுறை நகைச்சுவையாக இந்த வேடிக்கையான பாரம்பரியம் தொடங்கியது என்று குழு கூறுகிறது. ரயிலில் ஏறும் ஏழு பேருமே கீழே கால்சட்டை அணிந்திருக்க மாட்டார்களாம்.






அதன்பிறகு லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ருமேனியா,லிஸ்பன், டோக்கியோ மற்றும் டொராண்டோ உட்பட உலகளவில் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் இது ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் இது கவனிக்கப்படவில்லை. அதை அடுத்து 2023ம் ஆண்டில், இந்த நிகழ்வு லண்டனில் ஸ்டிஃப் அப்பர் லிப் சொசைட்டியால் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் பங்கெடுப்பவர்கள் கால்சட்டை அணியாமல் வரத்தயாராக இருக்க வேண்டும். மற்றும் முகத்தை ஏதேனும் ஒரு நகைச்சுவையான பாவணையில் வைத்திருக்க வேண்டுமாம்..!


2000ம் ஆண்டில் வெளியான ’வெற்றிக்கொடிகட்டு’ படத்தில் ’துபாய் ரிட்டர்ன்’ சுடலைமுத்துதான் முதன்முதலில் இந்த பாரம்பரியத்தை தொடங்கினார் என்பதும் நாம் இங்கே  நினைவுகூற வேண்டி உள்ளது....