ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அந்த நாட்டில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தலிபான்கள் ஆட்சியில் முன்பு இருந்தபோது விதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக அளவுக்கதிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது உலக நாடுகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.


இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என தலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசின் பொதுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ பெண்கள் இனி ஆண் மருத்துவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பெண் மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் இதனை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தலிபான்கள் ஆட்சியின் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் நேடா முகமது நதீம் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ மறு அறிவிப்பு வரும் வரை பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டது.


இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டு இருப்பதால், பெண்கள் மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்புகளை படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பெண் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். இதனால், பெண்கள் நோய்வாய்படும்போது  உயிரிழப்புக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்படும் என்றும், இந்த அதிரடி உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் தலிபான் அரசுக்கு ஜி7 நாடுகள் வலியுறுத்தி வருகிறது. 


இதற்கு முன்னதாகவும், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை வழங்க வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.