நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. தொடங்கிய முதலே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடக்கப்படுவது கவலையை ஏற்படுத்தி வருகிறது.
லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இரு அவையிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் vs பாஜக:
இதன் காரணமாக, அவை நடவடிக்கைகள் நான்கு நாள்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி பேசிய கருத்துகளுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோல, அதானி முறைகேடு தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறது.
மக்களவை ஆடியோ 20 நிமிடங்களுக்கு முடக்கம்:
இந்த சூழ்நிலையில், இந்த விவகாரங்கள் இன்றும் அவை நடவடிக்கைகளை முடக்கியது. இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சரமாரி குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. இன்றைய அமர்வின்போது, மக்களவையில் ஆடியோ 20 நிமிடங்களுக்கு முடக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்த போது அவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாற்காலிக்கு அருகில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்வதையும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்கள் எழுப்புவதும் அதில் பதிவாகியுள்ளது.
கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு ஆடியோ எதவும் கேட்கவில்லை. ஆனால், கத்துவதை நிறுத்தும்படி கூறி, அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிக்கும்போது ஆடியோ மீண்டும் ON செய்யப்படுகிறது. மக்களவையில் ஆடியோ ஏன் முடக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தை அரசு இன்னும் அளிக்கவில்லை.
"முன்னதாக மைக்குகள் மட்டும் முடக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. (பிரதமர் நரேந்திர) மோடியின் நண்பருக்காக மக்களவை ஊமையாக்கப்பட்டுள்ளது.
அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் கூட்டுப் நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) விசாரணைக்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை இல்லாமல் ஆக்க மைக்குகள் முடக்கப்பட்டன. ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பதில்லை என ஆளும் பாஜக முடிவு செய்தது" என காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி அப்படி என்னதான் பேசினார்?
பிரிட்டனில் ஜனநாயகம் குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நாடாளுமன்றம், பத்திரிகைகள் மற்றும் நீதித்துறை ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள, சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களும், பத்திரிகைகளும் தாக்கப்படுகின்றனர். இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதலை, நாங்கள் எதிர்கொள்கிறோம்.
பாரத் ஜோடோ யாத்திரையை குறிப்பிட்ட ராகுல் காந்தி, இந்த யாத்திரை தன்னை ஒரு அரசியல்வாதியாக மாற்றியுள்ளது. கொலை மிரட்டல்களுக்கு மத்தியிலும் நடைபயணம் மேற்கொண்டோம்” என்றார்.