அலாஸ்காவில் உள்ள ஒரு மலையின் மீது ஒரு வினோதமான மேகம் தோன்றியதால், அப்பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் ஏதோ அடையாளம் காணமுடியாத பொருள் பூமியில் மோதிவிட்டது என்று பரபரப்படைந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள லேசி மலைக்கு மேலே மர்மமான மேகம் ஒன்று தோன்றியுள்ளது. அதனை உடனடியாக படம் பிடித்த உள்ளூர்வாசிகள் சமூக ஊடகங்களில் மேகத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து பெரும் பரபரப்பாக்கி உள்ளனர். ரஷ்ய படையின் தக்குதலோ என்று பலர் சந்தேகித்தாலும், சிலர் இது ஏதோ அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் என்றோ, பூமியில் விழுந்த விண்கல் என்றோ நினைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து இந்த விசித்திரமான மேகத்தை, விமான விபத்தாக இருக்குமோ என்றும், ரகசிய இராணுவ ஆயுதம் என்றும் நினைத்து அஞ்சி உள்ளனர்.



மொத்தத்தில் இந்த மேகத்தின் புகைப்படம் சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டு பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனால் அந்த பகுதி மக்கள் பரபரப்படைந்தனர். சமூக ஊடகங்களில் இந்த விசித்திர மேகம் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கி இருந்ததால், அங்கிருந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அலாஸ்கா மாகாணத்தின் ட்ரூப்பர்களின் கூற்றுப்படி, "ஒரு மீட்புக் குழு லேசி மலைக்கு அனுப்பப்பட்டது, ஆனால் அவர்கள் சந்தேகத்திற்கு இடமாக எதுவும் தென்படவில்லை. விமானம் எதுவும் தாமதமோ, காணமலோ போனதாக எங்கும் அறிக்கைகள் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக ஹெலிகாப்டரில் மீட்புக் குழு ஒன்று வெள்ளிக்கிழமை காலை லேசி மலைப் பகுதியைச் சுற்றி ஒரு பயணத்தை மேற்கொண்டது. அப்போதும் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டறியப்படவில்லை.






விபத்துக்குள்ளான விமானத்தின் அறிகுறிகள் எதுவும் அங்கு இல்லை.", என்று கூறினார்கள். இந்த விசாரணையை அலாஸ்கா ஸ்டேட் ட்ரூப்பர்ஸ் மற்றும் அலாஸ்கா மீட்பு ஒருங்கிணைப்பு மையம் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பகுதியில் ஒரு பெரிய ஜெட் விமானம் பறந்து கொண்டிருந்தது தெரியவந்தது. நியூயார்க்கில் உள்ள ஜே.எஃப்.கே விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் விமானம் தொடர்பு கொண்டு அது ஒரு சாதாரண விமான செயல்பாடுதான் என்று அறிவித்தது,” என்று அலாஸ்கா ஸ்டேட் ட்ரூப்பர்ஸ் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இறுதியில், விசித்திரமான தோற்றமுடைய மேகம்தான் ஜெட் விமானத்துடன் இணைந்து சூரிய ஒளியில் தனித்துவமான உருவத்தை ஏற்படுத்தியது' என்று முடிவு செய்தனர்.