அண்மையில் சீனாவின் உளவுக் கப்பல் இலங்கைக்கு வந்து போன நிலையில் தற்போது அமெரிக்காவின் ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் இலங்கைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  அமெரிக்காவின் P 627 என்று அழைக்கப்படும் ஆழ்கடல் ஊடுருவல் கப்பல்  இலங்கைக்கு வருவதாக கூறப்படுகிறது.


இந்த கப்பல் அமெரிக்காவின் சியாட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை தொடங்கியுள்ளதாக  தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின், குறித்த ஆழ்கடல் ஊடுருவல் கப்பலானது வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என சொல்லப்படுகிறது.


இந்த ஆழ்கடல் ஊடுருவல் கப்பலானது இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவினால் இலங்கையின் கடற்படைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட கப்பல் என கூறப்படுகிறது. இந்நிலையிலேயே அமெரிக்க ஊடுருவல் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் கரையோர பாதுகாப்பு அமைப்பால் இலங்கை கடற்படைக்கு அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது என கூறப்படுகிறது. குறித்த ஊடுருவல் கப்பல் 
கடற்படையின் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில்  நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் சியாடெல் துறைமுகத்திலிருந்து இந்த ஆழ்கடல் ஊடுருவல் கப்பலானது கடந்த 03ஆம் தேதி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. 115 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலானது அதிகபட்சமாக 29 நாட்டிக்கல் வேகத்தில் செல்லும் என  கூறப்படுகிறது. இந்த கப்பல் குறைந்தது 14,000 எம்.என் தாங்கு திறன் கொண்டதாக இருக்கிறது. 


மேலும் 187 பேர் வரையில் பயணம் செய்யக் கூடிய வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆழ்கடல் ஊடுருவல் கப்பலில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் ரோந்து நடவடிக்கைக்காக அமெரிக்காவினால்   இந்த கப்பல் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிநவீன வசதிகள் கொண்ட கடற்படையினர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆழ்கடல் ஊடுருவல் கப்பலானது இலங்கையின் பயன்பாட்டுக்காக அமெரிக்கா வழங்கி இருப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது.


குறிப்பாக அண்மையில் சீனாவின் உளவு கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை  துறைமுகத்துக்கு வந்து சென்றது. இது இந்தியா ,இலங்கை, சீனா ஆகிய நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உலக நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்தன. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தன்மை மற்றும்  வந்த சீனாவின்  ஆய்வுக் கப்பல் கொண்டிருந்த தனித்துவமிக்க தொழில்நுட்ப திறன்களை வைத்து ஆய்வுகளில் ஈடுபடலாம் என்று ஒரு அச்சமும் எழுந்து இருந்தது. இந்நிலையில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை வந்த சீன கப்பல் மீண்டும் சீனா விரும்பியதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் சீன கப்பல் வருவதற்கு இரு நாட்கள் முன்பாக இந்தியா இலங்கைக்கு ஒரு கண்காணிப்பு விமானத்தை  வழங்கியது. இந்தியா வழங்கிய நவீனத்துவமிக்க இந்த கண்காணிப்பு விமானமும் கடற்கரையினரின் செயல்பாட்டுக்காகவே வழங்கப்பட்டதாகவே கூறப்பட்டது.


இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் இலங்கை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அது இலங்கைக்கு அமெரிக்காவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கப்பல் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தடுத்து உலக நாடுகள் இலங்கை மீது காட்டும் கரிசனை எதற்காக என்பது என்ற ஒரு கேள்வி எழும்புகிறது? இலங்கையின் தற்போதைய முக்கிய தேவையே அங்குள்ள பொருளாதாரத்தை‌ நிலை நாட்டுவதாகும். அங்குள்ள மக்களின் பசி பட்டினியை போக்குவதே தற்போது பெரும் திண்டாட்டமாக இருக்கிறது.


இலங்கையில் அதிகரித்திருக்கும் விலையேற்றமே மக்களின் கழுத்தை நெறித்து கொண்டிருக்கிறது .இந்நிலையில் கப்பல்களாலும், விமானங்களாலும் எந்த அளவுக்கு இந்த பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது. இந்து சமுத்திர  கடல் பிராந்தியத்தில் உலக நாடுகள் அரசியல் செய்வதைத்தான்  முன்னோட்டமாக கொண்டிருப்பதை தவிர இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட்டு தீர்த்து வைப்பதற்கு முனைந்ததாகவே தெரியவில்லை