சமூக வலைத்தளங்களில் பல்வேறு பொருள்களைப் ப்ரொமோட் செய்து பிரபலமாக மாறி வருகின்றனர் சமூக வலைத்தள இன்ஃப்ளூயென்சர்கள். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஃபிட்னெஸ் இன்ஃப்ளூயென்சரான லெக்ஸி ரீட் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கோமாவில் இருப்பதாகவும், அவரது உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு, தனது கணவர் டேனியுடன் இணைந்து தன்னுடைய 141 கிலோ எடையைக் குறைப்பதை ஆவணப்படுத்தியதில் லெக்ஸி ரீட்டின் சமூக வலைத்தள ஃபாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. தற்போது பல்லாயிரக்கணக்கான ஃபாலோவர்களைக் கொண்ட இன்ஃப்ளூயென்சராக இருக்கும் லெக்ஸி ரீட் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவரது கணவர் டேனி.
லெக்ஸி ரீட் மருத்துவமனைப் படுக்கையில் இருப்பதைப் படமாகக் கொண்டிருக்கும் இந்தப் பதிவில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு லெக்ஸி ரீட் உடல் நலிவுற்றதாகவும், அவரால் உணவை விழுங்க முடியவில்லை என்பதாலும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வந்த அவருக்குக் கோமா நிலை ஏற்படுத்தப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் வாழ்ந்து வருகிறார்.
`ஒரு நாள் தாமதாக வந்திருந்தாலும் அவள் இறந்திருப்பாள் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவளுக்கு டையாலிஸிஸ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; அவளால் நடக்க இயலாது; மீண்டு வருவதற்கான முயற்சிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ எனக் கூறியுள்ளார் டேனி. லெக்ஸி ரீட்டின் உடலுறுப்புகள் படிப்படியாக செயலிழந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் டேனி குறிப்பிட்டுள்ளார்.
`உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி; அவை எங்களுக்குப் பெரிதும் மன மகிழ்வைத் தருகின்றன. அவளது கதையில் இது கடினமான போராக இருக்கப் போகிறது.. ஆனாலும் அவள் பலமாகப் போராடுகிறாள்’ என்றும் கூறியுள்ளாட் லெக்ஸி ரீட்டின் கணவர் டேனி.
லெக்ஸி ரீட்டை மீண்டும் ஆரோக்கியமாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறும் டேனி, லெக்ஸி ரீட் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இருவரிடமும் மருத்துவக் காப்பீடு எதுவும் இல்லை என்பதாகவும் கூறியுள்ளார்.
டேனி இவ்வாறு கூறியதைத் தொடர்ந்து, பல ரசிகர்களும் கமெண்டில் லெக்ஸி ரீட் மீண்டு வருவதற்கான பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளனர். சிலர் டேனியிடம் GoFundMe முதலான தளங்களில் நிதி திரட்டி, லெக்ஸி ரீட்டின் மருத்துவக் கட்டணத்தைச் சமாளிக்குமாறும் பரிந்துரை அளித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் @fatgirlfedup என்ற யூசர்நேமின் கீழ் இயங்கும் லெக்ஸி ரீட் தற்போது சுமார் 1.2 மில்லியன் ஃபாலோவர்களுக்கும் மேல் கொண்டிருக்கிறார். மேலும், யூட்யூப் தளத்தில் அவருக்கு 90 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். தன் கணவர் டேனியுடன் அவரது உடல் எடைக் குறைப்பு வீடியோவைப் பகிர்ந்து பிரபல இன்ஃப்ளுயென்சராக மாறியுள்ளார் லெக்ஸி ரீட். இருவரும் மொத்தமாக சுமார் 185 கிலோ எடையைக் குறைத்துள்ளனர்.