போர்ச்சுகல் - ஸ்பெயின் ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள அணையில் வறட்சி காரணமாக நீர் முழுவதுமாக வற்றியுள்ள நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நீருக்கடியில் மூழ்கிய கிராமம் மீண்டும் மேல் எழும்பியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு காலிஷியா பகுதியில் உள்ள லிமியா ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக 1992ஆம் ஆண்டு காலி செய்யப்பட்ட ஏசிரிடோ என்ற கிராமம் மீண்டும் மேலே எழும்பியுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக அல்டோ லிண்டோசோ ஏரி அதன் மொத்த கொள்ளளவில் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே கொண்டிருப்பதாகக் கூறியுள்ளதோடு, நிலைமை மேலும் மோசமாக மாறலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவரான மாக்ஸிமினோ பெரெஸ் ரோமெரோ என்பவர், `திரைப்படத்தைப் பார்ப்பது போல இருக்கிறது.. எனக்கு வருத்தமாக இருக்கிறது. சூழலியல் மாற்றத்தின் காரணமாகவும், வறட்சி காரணமாகவும் அடுத்து வரும் ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை நினைத்தால் பதட்டமாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
கிராமம் மீண்டும் மேலே எழும்பியுள்ளதைப் பார்வையிட அப்பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, கதவுகளாகவும், சுவர்களாகவும் இருந்த பகுதிகளையும், அழிந்துபோன கடைகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.
குடிநீர் நீருற்று ஒன்று இந்த மூழ்கிய கிராமத்தில் இன்னும் செயல்படும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனோடு உடைந்த சுவருக்கு அருகில் முழுவதுமாக துருப்பிடித்த பழைய கார் ஒன்றும் மேல் எழும்பியுள்ளது.
இப்பகுதியின் மேயர் மரியா டெல் கார்மென் யானெஸ் இந்த நிலைமைக்குக் கடந்த சில மாதங்களில், குறிப்பாக ஜனவரியில் மழை பெய்வது குறைந்துள்ளதே காரணம் எனக் கூறியுள்ளார்.
ஸ்பெயின் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக, அதன் எல்லையில் உள்ள போர்ச்சுகல் நாட்டின் அரசு, கடந்த பிப்ரவரி 1 அன்று, அல்டோ லிண்டோசோ உள்ளிட்ட 6 அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை மின்சார உற்பத்திக்காகவும், பயிர்களுக்குப் பாய்ச்சுவதற்காகவும் பயன்படுத்துவதை முழுமையாகத் தடைவிதித்து அறிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் அங்குள்ள மின்சார உற்பத்தி நிறுவனமான ஈடிபி, நீர் வளத்தைக் கவனமாகக் கையாண்டதாகவும், தற்போது நீர் வரத்து குறைந்திருப்பதன் காரணம் வறட்சி மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு ஸ்பெயினில் கடந்த ஆண்டு குளத்தில் உள்ள நீரின் அளவு அதிகளவில் குறைந்திருப்பதாகவும், ஈடிபி நிறுவனம் அணையை அதிக பயன்பாட்டுக்கு உள்ளாக்குவதாகவும், பல்வேறு கிராமங்கள் புகார் எழுப்பியிருந்தன. அப்போது, ஈடிபி தரப்பில் விதிமுறைகளைப் பின்பற்றியே நீர் பயன்படுத்தப்படுவதாக பதிலளித்திருந்தது.
ஸ்பெயின் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டின் நீர்நிலைகளின் மொத்த கொள்ளளவு 41 சதவிகிதமாக இருப்பதாகக் கூறியுள்ளது. அந்நாட்டின் சராசரி கொள்ளளவான 61 சதவிகிதத்தை விட இது மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.