Israel Attack On Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வான்வழி தாக்குதல் - 22 பேர் பலி


லெபனானின் சுகாதார அமைச்சகத்தின்படி, வியாழன் மாலை பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால், இதற்கு முன்பு குறிவைக்கப்படாத இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்தனர். புதிய தாக்குதலில் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் சிறிய கடைகளின் அடர்த்தியான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இறந்தவர்களில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். தாக்குதலுக்கு முன்பு எந்தவித முன்னெச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.


உயிர் பிழைத்த ஹிஸ்புல்லா தலைவர்:


இஸ்ரேலிய தாக்குதல் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவரை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஆனால் மத்திய பெய்ரூட்டில் இருந்த அந்த நபர் உயிர் பிழைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய துருப்புக்கள் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் டஜன் கணக்கான ராக்கெட்களை,  இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை இலக்காக கொண்டு தாக்கியுள்ளனர்.  லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையான UNIFIL, ராஸ் அல்-நகூராவில் உள்ள படையின் முக்கிய தலைமையகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்களது பிரிவைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாக தெரிவித்தனர்.