ரத்தகளரி இன்றி பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும் சோவியத் ஒன்றியத்தின் உடைப்பை தவிர்க்க தவறிவிட்ட மிக்கைல் கோர்பசேவ் இன்று, தனது 91ஆவது வயதில் காலமானார். 


சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபரான கோர்பசேவ், அமெரிக்காவுடன் ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டு மேற்கத்திய நாடுகளுடன் கூட்டு சேர்ந்து, இரண்டாம் உலக போர் காலத்திலிருந்து ஐரோப்பிய கண்டம் பிளவுக்கு காரணமான இரும்புதிரையை விலக்கி ஜெர்மனியை ஒன்றிணைத்தவர்.


ஆனால், அவரது உள்நாட்டு சீர்திருத்தங்கள் சோவியத் ஒன்றியத்தை பலவீனப்படுத்தவே உதவியதாகவும் இறுதியில் அது பல கூறுகளாக உடைந்ததாகவும் இது, 20ஆம் நூற்றாண்டின் மிகபெரிய புவிசார் அரசியல் பேரழிவு என்றும் ரஷிய அதிபர்ன் புதின் குறிப்பிட்டிருந்தார்.


தன்னால் முடிந்தால் சோவியத் ஒன்றியத்தின் சிதைவை மாற்றியமைப்பேன் என்று 2018 இல் புதின் கூறியிருந்தார். அவருக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 1990ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கோர்பசேவ், சுதந்திர ஐரோப்பாவுக்கான வழியைத் திறந்துவிட்டதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் புகழாரம் சூட்டியுள்ளார்.


மேற்கத்திய நாடுகளுடனான கூட்டணி


பல ஆண்டு கால பனிப்போர் பதற்றம் மற்றும் மோதலுக்குப் பிறகு, கோர்பசேவ் சோவியத் ஒன்றியத்தை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேற்கு உலக நாடுகளுக்கு நெருக்கமாக கொண்டு வந்தார்.


"ரஷியாவிலும் அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கும், ஐரோப்பாவின் 50 சதவிகித மக்களுக்கும் அவர் சுதந்திரம் அளித்தார். வரலாற்றில் சில தலைவர்கள் மட்டுமே தங்கள் காலத்தில் இத்தகைய தீர்க்கமான செல்வாக்கைக் கொண்டிருந்தனர்" என முன்னாள் ரஷிய தாராளவாத எதிர்க்கட்சித் தலைவர் கிரிகோரி யாவ்லின்ஸ்கி கூறியுள்ளார்.


ஆனால், உக்ரைன் படையெடுப்பின் காரணமாக மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை ரஷியாவை நொறுக்கியுள்ளது. இதன் விளைவாக, கோர்பசேவ் பின்பற்றி வந்த மரபு சிதைவை சந்தித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தால் ரஷியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும், புதிய பனிப்போர் குறித்த பேச்சுகள் அடிபட தொடங்கிவிட்டன.


1956 இல் ஹங்கேரி மற்றும் 1968 இல் செக்கோஸ்லோவாக்கியாவில் கிளர்ச்சிகளை நசுக்க டாங்கிகளை அனுப்பிய முந்தைய ரஷிய தலைவர்களைப் போலல்லாமல், 1989இல் கம்யூனிச ஆதரவு கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் சோவியத் நாடுகளை உலுக்கியபோது, ​​​​கோர்பசேவ் படைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்தார். 


ஆனால், இந்த ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் சோவியத் ஒன்றியத்தின் 15 குடியரசுகளில் சுயாட்சிக்கான விருப்பங்களை தூண்டியது. குழப்பமான சூழலுக்கு வித்திட்ட இந்த நிகழ்வு அடுத்த இரண்டு ஆண்டுகளில், சோவியத் ஒன்றியத்தின் பிரிவுக்கு காரணமாக அமைந்தது.