முன்னாள் சோவியத் யூனியனின் அதிபர் கோர்பசெவ் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 90 ஆகும். இதனால், மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


சோவியத் யூனியனின் முன்னாள் அதிபரான கோர்பசெவ் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், அந்த நாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.




கோர்பசெவ் மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கோர்பசெவ்வின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


உலகில் லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்ட மற்றும் உலகம் என்றுமே மறக்க முடியாத இரண்டு உலகப்போர்களிலும் மிக முக்கியமான பங்கு வகித்த நாடு சோவியத்யூனியன். உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷ்யா முன்பு சோவியத் யூனியனின் அங்கமாக இருந்தது. கோர்பசெவ் 1931ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி பிறந்தவர்.




கோர்பசெவ் ஸ்டாவ்ரோபோல் கிராயில் உள்ள பிரிவோல்நோயி பகுதியில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஸ்டாலின் ஆட்சியில் வளர்ந்த கோர்பசெவ் சட்டப்படிப்பை முடித்தவர். இவர் மாஸ்கோ பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே ரைசா திடாரென்கோ என்பவரை 1953ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


சட்டப்படிப்பை முடித்த கோர்பசெவ் தன்னுடைய அபார திறமையால் அரசியலில் ஈடுபட்டார். பின்னர், படிப்படியாக வளர்ந்து அந்த நாட்டின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக வளர்ந்தார். சோவியத் யூனியனின் 7வது தலைவரான கான்ஸ்டான்டின் செர்னென்கோ 1985ம் ஆண்டு மார்ச் 10ம் நாள் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகு கோர்பசெவ் மிகப்பெரிய சாம்ராஜ்யமான சோவியத் யூனியனின் 8வது அதிபராக பொறுப்பேற்றார். சோவியத் யூனியனின் கடைசி அதிபரும் கோர்பசெவ் ஆவார்.




கோர்பசெவ் 1991ம் ஆண்டு சோவியத் யூனியனை 15 நாடுகளாக பிரித்தார். அதன்பின்பே, அர்மெனியா, அஜெர்பைஜான், பெலாரஸ், ஈஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லத்வியா, லிதுவேனியா, மோல்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உருவாகின.