இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச இன்று காலை மாலத்தீவுகளுக்கு சென்றடைந்துள்ளார். மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் அவருக்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில், இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டபய இன்று காலை மாலத்தீவு தலைநகர் மாலியில் உள்ள வேலனா விமான நிலையத்திற்கு சென்று இறங்கினார். அவரை, மாலத்தீவு அரசு அலுவலர்கள் வரவேற்றனர்.


 






நேற்று இரவு கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோட்டபய, அவரது மனைவி, அவரது பாதுகாவலர்கள் என நான்கு பேர் Antonov-32 ராணுவ விமானத்தின் மூலம் மாலத்தீவுகளுக்கு கிளம்பியதாகக் கூறப்படுகிறது. மாலத்தீவுகளுக்கு சென்ற அவர்கள், காவல்துறையினரின் பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என விமான நிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


அதிகார மாற்றத்தை சுமூகமாக மேற்கொள்ளும் வகையில் இன்று ராஜினாமா செய்யவிருப்பதாக கோட்டபய ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். இச்சூழலில், ஜூலை 15ஆம் தேதி, புதிய அதிபரை தேர்வு செய்ய சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


அதிபராக இருப்பதால், கோட்டபயவை யாரும் கைது செய்ய முடியாது. எனவே, கைதிலிருந்து தப்பிக்கும் வகையில் ராஜினாமா செய்வதற்கு முன்பு வெளிநாட்டிற்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். முன்னதாக, நாட்டை விட்டு வெளியேற கோட்டபய செவ்வாய்கிழமை முயற்சி செய்தார். ஆனால், வெளிநாட்டிற்கு செல்ல விடாமல் விமான நிலைய குடியேற்ற அலுவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். 


கோட்டபயவின் பாஸ்போர்டில் முத்திரை வைப்பதற்கு விஐபி அறைக்கு குடியேற்ற அலுவலர்கள் செல்ல மறுத்ததாகவும் ஆனால், பொது மக்கள் பயன்படுத்தும் அறைக்கு வருவதற்கு கோட்டபய அஞ்சியதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் அதிபர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகார்பூர்வ இல்லங்களுக்குள் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை அடுத்து பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டின.


அனைத்து கட்சி அரசு பொறுப்பேற்கத் தயாரானதும் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக விக்ரமசிங்கவும் அறிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண