சீனாவில் 35 நபர்களிடம் லாங்யா ஹெனிபா வைரஸ் எனும் புதுவகை வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ், குரங்கு அம்மை நோய் பாதிப்புகளே இன்னும் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த நோய் தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.


35 பேர் பாதிப்பு


லாங்யா ஹெனிபாவைரஸ் எனும் இந்நோயால் இதுவரை 35 நபர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சீனாவின் தைவான் டைபே டைம்ஸ் எனும் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


முன்னதாக சீனாவின் ஷாண்டோங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் கடுமையான லாங்யா ஹெனிபாவைரஸ் நோய்த்தொற்றுடன் 35 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மொத்தம் 26 நபர்களுக்கு லாங்யா வைரஸ் தாக்குதல் தவிர்த்து வேறு நோய்க்கிருமிகள் தாக்கிய அறிகுறிகள் இல்லை எனவும் தைவானின் நோய்க்கட்டுப்பாட்டு மையங்கள் தலைமையகம் தெரிவித்துள்ளது.


அறிகுறிகள்


நோய் பாதிப்புக்குள்ளான  26 பேருக்கு காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, தசை வலி, குமட்டல், வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.


மேலும் இவர்களிடம் ரத்த வெள்ளை அணுக்கள் குறைதல், பிளேட்லெட் எண்ணிக்கை குறைதல்,  கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகிய பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.


’லே வி’ வைரஸ்


’லே வி’ வைரஸ் என்றும் இந்த வைரஸ் தொற்று அழைக்கப்படும் நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டே இந்நோயின் முதல் வழக்கு பதிவாகியுள்ளது.


கடந்த 2019, 2020ஆம் ஆண்டுகளில் மொத்தம் 14 வழக்குகள் கண்டறியப்பட்டன. எனினும் கொரொனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து ​​2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் லாங்யா ஹெனிபாவைரஸ் வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும் கொரோனா வைரஸ் பரவல், அதன் பெரும் தாக்கத்துக்கு மத்தியில் ஆராய்ச்சியாளர்கள் இந்நோய் பற்றிய ஆய்வு மேற்கொள்ளவில்லை.


இந்நிலையில், முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தைவானின் நோய்க்கட்டுப்பாட்டு மையங்களின் இயக்குநர் சவுங் ஜென் இதுவரை ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு இந்நோய் பரவியதாக எந்த வழக்குகளும் பதிவாகவில்லை என்றும் இந்நோய் இந்த வகையில் பரவுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


விலங்குகள் - மனிதர்களுக்கு பரவல்


மேலும், முன்னதாக பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளிடம் நடத்தப்பட்ட செரோலாஜிக்கல் ஆய்வில்  2 விழுக்காடு ஆடுகளும் 5 விழுக்காடு நாய்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


இந்நோய் குறித்து வன விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவில் ஷ்ரூ எனப்படும் விலங்கிடமிருந்து (பூச்சிகளை உண்டு வாழும் எலியைப் போன்ற சிறு பாலூட்டி விலங்கு) லாங்யா ஹெனிபாவைரஸ் பரவத் தொடங்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.




இந்நோய் நிபா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என மருத்துவ இதழ்கள் முன்னதாகத் தெரிவித்துள்ளன. நிபா  உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோய், உலக சுகாதார நிறுவனம் (WHO) அடுத்த தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களில் ஒன்றாக நிபாவை பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


ஜூனோடிக் நோய்க்கிருமிகள் பாக்டீரியா, வைரஸ் ஒட்டுண்ணிகள் அல்லது வேறு வழக்கத்துக்கு மாறான வகையில் பரவலாம் என்றும், உணவு, நீர் அல்லது சுற்றுச்சூழலின் மூலம் மனிதர்களுக்கு இவ்வகை நோய்கள் பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.