உலகளவில் டெல்டா கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகருத்து வரும் நிலையில், மற்றொரு புதிய வகை உருமாறிய கொரோனா தொற்றான 'லாம்ப்டா' தொற்று பாதிப்புகள் 27 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 


லாம்ப்டா வகை என்றால் என்ன?  


C.37 என்று அறியப்படும் லாம்ப்டா தொற்று கடந்தாண்டு பெரு நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்டது. மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் பெரு நாட்டில் கண்டறியப்பட்ட புதிய பாதிப்புகளில், 51% சதவித பாதிப்புகள் லாம்ப்டா கொரோனா தொற்று என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சிலி நாட்டில் லாம்ப்டா தொற்று கிட்டத்தட்ட மூன்றாவது அலையை எற்படுத்தியுள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, டெல்டா வகை தொற்றால் பெரும் சேதத்தை சந்தித்து வரும் இங்கிலாந்தில், கடந்த வாரம் லாம்ப்டா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரம் முகமை தெரிவித்துள்ளது.       




 


டெல்டா தொற்றை விட ஆபத்தனாதா?   


உண்மையில், இப்போதைக்கு ‘லாம்ப்டா’ கொரோனாவின் தன்மை பற்றி அறிவியல் உலகத்துக்கு தெரியாது. உலக சுகாதார நிறுவனம், புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் (Variant of Interest (VoI)) எனத் தற்போது லாம்ப்டாவை வகைப்படுத்தியுள்ளது. இது கவலையளிக்க கூடியதாக Variant of Concern (VoC) இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. கவலையளிக்கக் கூடிய வகை என்றால், பரவும் வேகம் தீவிரமாக இருக்கும். 


இதுவரை, இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta), பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617.2- டெல்டா வகை) ஆகிய நான்கு மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது. 




நூற்றுக்கும் அதிகமான நாடுகளில், டெல்டா வகை கொரோனா தொற்றின் தாக்கம் உணரப்படுகிறது. டெல்டா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம், நோயாளிகளின் நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்டா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்து காணப்படுவதாக  இங்கிலாந்து சுகாதார முகமை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.                 


பின், ஏன் கவலை?   


முதலாவதாக, லாம்ப்டா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரு, மெக்சிகோ,சிலி உள்ளிட்ட நாடுகள் அதிக அளவு உயிரிழப்பு விகிதம் கொண்ட நாடுகள் வரிசையில் உள்ளன.


குறிப்பாக, பெரு நாட்டின் சராசரி இறப்பு எண்ணிக்கை 9.2% ஆக உள்ளது. இதனோடு ஒப்பிடும் போது இந்தியாவின் விகிதம் 1.3% ஆக இருக்கிறது. எனினும், இறப்பு எண்ணிக்கை விகிதத்துக்கும், லாம்ப்டா வீரியத்துக்கும் உள்ள தொடர்புகள் இதுவரை கண்டறியப்பட வில்லை. 




இரண்டாவதாக, கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் உள்ள T478K, P681R and L452R மாற்றங்கள் டெல்டா வகையாகும். ஆனால், வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 7 மாறுபாடுகளின் தொகுப்பாக லாம்ப்டா உள்ளது. இத்தகைய மாற்றங்கள் ஆய்வாளர்களை குழப்பி வருகிறது.  இந்த மாற்றம் வைரசை மனிதர்களிடையே அதிகமாகவும், மிக எளிதாகவும் பரவச் செய்யலாம் என்று கணிக்கப்படுகிறது.  


மூன்றாவதாக, பெரு, சிலி ஆகிய நாடுகள் வளர்ந்து வளரும் நாடுகளின் வரிசையில் உள்ளன. இங்கு போதுமான மரபணு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது. எனவே, உண்மையான லாம்ப்டா வீரியத்தின் தாக்கங்கள் குறித்த தகவல்கள் போதியளவில் இல்லை.