உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று வடகொரியா ஆகும். வடகொரியா தனது எல்லையை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது. சீனா உடனான எல்லையில் அமைந்துள்ளது வடக்கு பியாங்கன்  மாகாணம் அமைந்துள்ளது. வடகொரியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள இந்த மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


வடகொரியாவில் வெள்ளம்:


இதனால், அந்த பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த வெள்ளம் காரணமாக அந்த பகுதியில் மட்டும் 5 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணியிலும், அவர்களுக்கு உணவுகள், தங்கும் வசதியை வழங்க அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.






இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்துவதற்காக மொத்தம் 10 ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்ற அதிபர் கிம் ஜாங் உன் மக்கள் பாதுகாப்பான முறையில் ஹெலிகாப்டரில் ஏற்றப்படுவதை நாற்காலி போட்டு அமர்ந்து பார்வையிட்டார்.


நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங்:


மேலும், சாலை முழுவதும் வெள்ளம் பாய்தோடும் நிலையில் தனது காரில் சென்று கார் ஜன்னல் வழியே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். வெள்ளத்தில் சிக்கியவர்களை எதிர்பார்த்ததை விட வேகமாக அந்த நாட்டு ராணுவம் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெள்ள சேதாரம் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.


வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அந்த நாட்டு அதிபர் நேரில் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.