இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 உறுப்பு நாடுகள் அடங்கிய அமைப்பே குவாட் கூட்டமைப்பாகும். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடந்து வருகிறது.
சீனாவுடனான உறவு எப்படி உள்ளது? இதற்காக, டோக்கியோ சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சீனா குறித்து பேசிய அவர், "எங்கள் அனுபவத்தின் அடிப்படையில் சீனாவைப் பற்றிய பார்வைகள் உள்ளன.
சீனாவுடனான நமது உறவுகள் நன்றாக இல்லை. அதற்கு முக்கிய காரணம் 2020இல், கோவிட் சமயத்தில், சீனாவுடன் நாம் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதிகளுக்கு சீனா மிகப் பெரிய படைகளைக் கொண்டு வந்து பதற்றத்தை உருவாக்கியது.
மோதலுக்கு வழிவகுத்தது. இரு தரப்பிலும் மக்கள் இறந்தனர். இப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாததால் அதன் விளைவுகள் தொடர்கின்றன. தற்போது சீனாவுடனான உறவு நன்றாக இல்லை. ஒரு அண்டை வீட்டாராக, நாங்கள் ஒரு சிறந்த உறவை எதிர்பார்க்கிறோம்.
"போர்க்களத்தில் தீர்வுகள் கிடைக்காது" ஆனால், அவர்கள் இந்திய - சீன எல்லையை மதித்து, அவர்கள் கடந்த காலத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களுக்கு மதிப்பளித்தால் மட்டுமே அது நடக்கும்" என்றார். ரஷிய - உக்ரைன் விவகாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை பலத்தால் தீர்க்க முடியாது என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு இருக்கிறது.
கடந்த 2-2.5 ஆண்டுகளில், இந்த மோதல் உயிர் பலிகளை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தை சேதப்படுத்தியுள்ளது. உலக அளவில் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிற சமூகங்களை பாதித்திருக்கிறது. உலகளாவிய பணவீக்கத்திற்கு பங்களித்தது.
போர்க்களத்தில் இருந்து தீர்வு வெளிப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. உரையாடலுக்கும் இராஜதந்திரத்துக்கும் நாம் திரும்ப வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்றைய நமது உணர்வு என்னவென்றால், இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்பதுதான்" என்றார்.