Kim Jong Un: வடகொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில், 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை:


பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தடுக்கத் தவறியதால், அரசு அதிகாரிகள் 30 பேரைதூக்கிலிட  வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக பல தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேரழிவுவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் சோசன் டிவியின் அறிக்கையின்படி , வட கொரிய அதிகாரியை மேற்கோள் காட்டி, கிம் ஜாங் உன், சமீபத்திய வெள்ளத்தால் ஏற்பட்ட "ஏற்றுக்கொள்ள முடியாத" உயிர் இழப்புகளுக்கு பொறுப்பானவர்களுக்கு "கடுமையான தண்டனை" வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். 


மரண தண்டனை நிறைவேற்றம்:


அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் கடமை தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்படி,  கடந்த மாத இறுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ''வெள்ளம் பாதித்த பகுதியில் 20 முதல் 30 பணியாளர்கள் கடந்த மாத இறுதியில் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்கிலிடப்பட்ட அதிகாரிகளின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) 2019 ஆம் ஆண்டு முதல் சாகாங் மாகாணக் கட்சிக் குழுவின் செயலாளரான Kang Bong-hoon, Kim Jong-ஆல் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இயற்கை பேரிடர்:


கடந்த ஜூலை மாதம், வட கொரியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால், 4,000 வீடுகள் பாதிக்கப்பட்டன. 15,000 பேர் புலம்பெயர்ந்தனர். கிம் ஜாங் அன் அவர்களே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முற்றிலும் மீண்டும் கட்டியெழுப்ப மீட்டெடுக்கவும் பல மாதங்கள் ஆகும் என்று கூறினார். இடைக்கால நிவாரணமாக,  தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்ற வீரர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் உட்பட 15,400 பேருக்கு பியோங்யாங்கில் அரசாங்கம் தங்குமிடம் வழங்கியது.


அதேநேரம், வட கொரிய தலைவர்கிம் ஜாங் உன் வெள்ளத்தால் அதிக இறப்பு எண்ணிக்கை பற்றிய செய்திகளை மறுத்தார், கூற்றுக்களை "தவறான வதந்திகள்" என்று நிராகரித்தார். வட கொரியாவின் சர்வதேச நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வேண்டுமென்றே "ஸ்மியர் பிரச்சாரத்தின்" ஒரு பகுதியாக தென் கொரியா இந்த வதந்திகளை பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.


அதிகரிக்கும் மரண தண்டனைகள்:


இதனிடையே கொரியா டைம்ஸின் கூற்றுப்படி , கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு வட கொரியாவின் பொது மரணதண்டனைகள் வியக்கத்தகு முறையில் அதிகரித்துள்ளன. தொற்றுநோய்க்கு முன்பு, நாடு பொதுவாக ஆண்டுக்கு 10 பொது மரணதண்டனைகளைக் கண்டது. இருப்பினும், அந்த எண்ணிக்கை ஏறக்குறைய 100 வருடாந்திர பொது மரணதண்டனைகளாக உயர்ந்துள்ளது, இது பத்து மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது.