நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம் மொக்வா நகரிலிருந்து அண்டை நகருக்கு விவசாய பணிகளுக்காக 100 பேர் ஒரே படகில் பயணம் மேற்கொண்டனர். அப்போது ஆற்றில் பயணம் மேற்கொண்டபோது படகு ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 









படகு கவிழ்ந்ததில் படகில் பயணம் மேற்கொண்ட அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலரிந்த மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆற்றில் சிக்கித் தவித்த 30 பேரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இந்த விபத்தில் 26 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் இந்த படகில் பயணம் மேற்கொண்ட பலர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.






நைஜர் மாநில ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் போலோகி இப்ராஹிம் கூறுகையில், ”அம்மாநிலத்தின் மொக்வா உள்ளாட்சிப் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் படகில் பயணம் செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பெரிய அணையைக் கடந்து தங்கள் பண்ணைகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. பெண்கள் குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.


படகில் அளவுக்கு அதிகமான மக்கள் பயணம் மேற்கொண்டதால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இதே போன்ற ஒரு சம்பவம் நைஜர் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. அதில் படகு கவிழ்ந்து சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.  


கடந்த மாதம் துனிசியா (Tunisian) நாட்டின் எஸ்ஃபாக்ஸ் பகுதியிலிருந்து 45-க்கும் மேற்பட்ட மக்களுடன் ஒரு படகு  இத்தாலியை நோக்கி பயணம் மேற்கொண்டது. அந்தப் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவு அருகே பயணித்து கொண்டிருந்தபோது திடீரென உடைந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.