India-Canada: கனடா நாட்டில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இந்தியா-கனடா:


இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே நல்லுறவே நீண்ட காலமாக இருந்தது. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக உறவில் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் தான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டைச் சேர்ந்த காலிஸ்தான்  தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் தான் இப்போது  விஸ்வரூபம் எடுத்துள்ளது.


அதாவது, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கன்டனமும் தெரிவித்தது.  மேலும்,  இந்த  விவகாரம் தொடர்பாக கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை அந்நாடு கனடாவை விட்டு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் கனடாவின் தூதர் அதிகாரி ஒருவரை வெளியேற்றியது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் கனடா-இந்தியா இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை நேற்று அறிவுறுத்தியிருந்தது.


மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை:






இந்நிலையில், கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் சுக்தூல் சிங் என்று அடையாளப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகாவைச் சேர்ந்தவர் சுக்தூல் சிங். காலிஸ்தான் ஆதரவு இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த இவர்  2017ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் கனடாவுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. இவர் மீது ஏழு கிரிமினல் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து கனடாவுக்கு தப்பி சென்று தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். தேசிய புலனாய்வு முகமை நேற்று வெளியிட்ட பட்டியலில் உள்ள 43 கேங்ஸ்டர்களில் இடம் பெற்றிருந்த பயங்கரவாதி அர்ஷ்தீப் டால்லாவிடம் நெருக்கமானவராக இந்த சுக்தூல் சிங் அறியப்படுகிறார்.


இந்நிலையில், கனடா நாட்டில் வின்னிபெக் என்ற இடத்தில் இரண்டு கும்பல்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இந்த மோதலில் காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் இன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  பஞ்சாப்பைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் கனடாவுக்கு தப்பிச் சென்று சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாக இந்தியா குற்றச்சாட்டி வந்த நிலையில், ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.