அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருந்த ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியதால், புதிய அதிபர் வேட்பாளராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.


என்ன ஆனது பைடனுக்கு ?


நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். பைடனுக்கு 80 வயதை தாண்டிவிட்டதால், அவரது செயல்பாடுகளில் சுனக்கம் ஏற்பட்டது. ட்ரம்புடன் சமீபத்தில் நடந்த நேரடி விவாதத்திலும் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறினார். இது சொந்த கட்சியினரையே அதிருப்திக்கு உள்ளாக்கியது. அவருக்கு ஞாபக மறதி வேறு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்துள்ளார்.


கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்த பைடன்


அவர் வெளியிட்டுள்ள விலகல் அறிக்கையில், அமெரிக்க அதிபராக தனக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்பு வாழ்நாளில் கிடைத்த பெரிய பேறு என்றும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது நோக்கமாக இருந்தாலும் நாட்டு மக்கள், கட்சியின் நலனுக்காகவே விலகுகிறேன் என்று உருக்கமாக குறிப்பிட்டார். அதில், தன்னுடைய துணை அதிபராக பணியாற்றிய கமலா ஹாரிஸ்க்கு நன்றி தெரிவித்துள்ள பைடன், அவரை ஜனநாயக கட்சியின் புதிய அதிபர் வேட்பாளாராக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். இதனால் விரைவில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது


மன்னார்குடியில் கொண்டாட்டம் ; வழிபாடு


கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று அப்படி அவர் அறிவிக்கப்பட்ட பிறகு நடக்கவிருக்கும் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் எனவும் கமலா ஹாரிஸ்ன் பூர்விக கிராமமான மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தில் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.


ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் ஸ்டெனோகிராபராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார். ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று, பின்னர் அமெரிக்காவில் பி.வி கோபாலன் குடியேறினார்.


கமலா ஹாரிஸ் வரலாறு


இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும், ஜமைக்கா  நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக ஜோபைடனுக்கு ஜனநாயக கட்சி சார்பில் வாய்ப்பு கிடைத்த போதும், அவரது கட்சி தொண்டர்கள் ஜோ பைடனுக்கு வயதாகி விட்டதாக கூறி வேட்பாளரை மாற்ற வேண்டும் என தொடர்ந்து தெரிவித்த நிலையில், ஜோ பைடன்  தானாக முன்வந்து போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் ஜனநாயக கட்சி கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவிருக்கிறார்.


தமிழ்நாட்டோரு நெருக்கமாக இருக்கும் கமலா ஹாரிஸ் குடும்பம்


கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பது குறித்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் மேலும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி அவர் வெற்றி பெற கிராம மக்கள் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.