Kamala Harris Trump: அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னள் அதிபர் டிரம்பை எதிர்த்து, தற்போதைய துணை அதிபரான கமலா ஹார்ஸ் களம் காணும் சூழல் ஏற்பட்டுள்ளது.


ஜோ பைடன் விலகல்:


வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பான பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, வயது மூப்பு காரணமாக பைடன் போட்டியிலிருந்து விலக வேண்டும் என, சொந்த கட்சியினரே வலியுறுத்த தொடங்கினர். இதையடுத்து நீண்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளின் முடிவில், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார். இதனால், பைடன் Vs டிரம்ப் என இருந்த தேர்தல் களம் தற்போது டிரம்ப் Vs கமலா ஹாரிஸ் என மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இருவரும் தேர்தல் தொடர்பாக பேசியுள்ள கருத்துகள் இணயத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


டிரம்பை வீழ்த்த அனைத்தையும் செய்வேன் - கமலா ஹாரிஸ்:


ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகியதோடு, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவிக்க ஆதரவும் தெரிவித்தார். இதுதொடர்பான கமலா ஹாரிஸின் டிவிட்டர் பதிவில், “அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனின் அசாதாரண தலைமைத்துவத்திற்கும், பல தசாப்தங்களாக நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்கும் அமெரிக்க மக்கள் சார்பாக நன்றி. அதிபரின் ஆதரவை பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன், இந்த நியமனத்தை சம்பாதித்து வெற்றி பெறுவதே எனது நோக்கம். டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது தீவிர திட்ட நிகழ்ச்சி நிரலை தோற்கடிக்க ஜனநாயகக் கட்சியை ஒன்றிணைக்கவும் - நமது நாட்டை ஒன்றிணைக்கவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.


கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது - டொனால்ட் டிரம்ப்:


டிரம்ப் விலகல் மற்றும் கமலா ஹாரிஸ் வேட்பாள முன்மொழிவு பற்றி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, ”ஜோ பைடன் அமெரிக்க வரலாற்றில் ஒரு மோசமான அதிபர். அவருடன் போட்டிய்டுவதற்கு நேரத்தையும் பணத்தையும் செலவிட்டோம். விவாதத்தில் அவர் கண்ட மோசமான தோல்விக்குப் பிறகு, போட்டியிலிருந்து வெளியேறியுள்லார். இப்போது நாம் மீண்டும் தொடங்க வேண்டும். இதனால் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு திருப்பி செலுத்தப்படுமா?  ஜோ பைடனை சுற்றி இருந்த அனைவருக்குமே அவரால் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியாத என தெரிந்திருந்தும் அதனை மறைத்தனர். இருப்பினும், ஜோ பைடனை காட்டிலும் கமலா ஹாரிசை விழ்த்துவது எனக்கு எளிது தான்” என டிரம்ப் பேசியுள்ளார்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு?


ஜோ பைடன் விலகினாலும், தற்போது வரை ஜனநாயக கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. அடுத்த மாதம் 19ம் தேதி அந்த கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. அதன் முடிவில் புதிய அதிபர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.