Kamala Harris: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதை தொடர்ந்து, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது.
தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்:
வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர்களான, அதிபர் பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இதனிடையே, வயது மூப்பு காரணமாக பைடன் போட்டியிலிருந்து விலக வேண்டும் என, சொந்த கட்சியினரே வலியுறுத்த தொடங்கினர். இதையடுத்து நீண்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளின் முடிவில், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதனால், ஜனநாயக கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளர் யார்? டிரம்பை எதிர்த்து களம் காண்பது யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்தெடுக்கப்பட, வாய்ப்புள்ள நபர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.
கமலா ஹாரிஸ்:
ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதோடு, கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக்க ஆதரவு தெரிவித்துள்ளார். எராளமான கருத்து கணிப்புகளும் அவருக்கு ஆதரவாக உள்ளன. பைடன் கடந்த 2021ம் ஆண்டு அதிபராக பதவியேற்றதிலிருந்து, துணை அதிபரான கமலா ஹார்ஸ் ஓவல் அலுவலகத்தில் துடிப்பாக செயல்பட்டு வருகிறார். ஜனநாயகக் கட்சியின் வலுவான தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். 59 வயதான ஹாரிஸின் தந்தை ஜமைக்காவையும், தாய் இந்தியாவையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் பெண்மணி என்பதோடு, தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க செனட்டர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் அமெரிக்காவின் முதல் பெண் மற்றும் கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் துணை அதிபரும் இவரே ஆவார். ஒரு வழக்கறிஞராக தனது வாழ்க்கையில், ஹாரிஸ் கடினமானவர் என்ற நற்பெயரைக் கொண்டிருக்கிறார்.
கவின் நியூசோம்:
கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் பெயர் அதிபர் வேட்பாளர் பட்டியலில் ஒலிக்கிறது. 56 வயதான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த கவின், சான் பிரான்சிஸ்கோவின் முன்னாள் மேயர் ஆவார். அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட முக்கிய மாகாணத்தின் தலைவராக இருந்துள்ளார். மேலும், கருக்கலைப்பு அணுகலுக்கான புகலிடமாக அதனை மாற்றியுள்ளார். நியூசோம் உறுதியாக பைடனை ஆதரித்தார் மற்றும் அவருக்கு எதிரான கருத்துகளை நிராகரித்தார். அதேநேரம், தான் வேட்பாளராக வேண்டும் என்ற எண்ணங்களையும் அவர் மறைக்கவில்லை.
கிரெட்சென் விட்மர்:
மற்றொரு சாத்தியமான ஜனநாயக வேட்பாளர் கிரெட்சன் விட்மர். 52 வயதான இவர் மிச்சிகன் கவர்னராக இருக்கிறார். அவரது மாகாணத்தில் வலுவான தொழிலாள வர்க்க மக்கள் மற்றும் அதிகப்படியான கறுப்பின மற்றும் அரபு அமெரிக்க சமூகங்கள் உள்ளன. டிரம்பின் கடுமையான விமர்சகரான விட்மர், தீவிர வலதுசாரி போராளிக் குழுவினால் வகுக்கப்பட்ட கடத்தல் சதித்திட்டத்தின் இலக்காக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.’
ஜோஷ் ஷாபிரோ:
தேர்தலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பென்சில்வேனியா மாகாணத்தின், தற்போதைய கவர்னரான ஜோஷ் ஷாபிரோவின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் உள்ளது. 51 வயதான அவர் நவம்பர் 2022 இல் கவர்னராக வெற்றி பெற்ற நிலையில், ஏற்கனவே இரண்டு முறை மாநில அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார்களை எதிராக வலுவான கண்டனங்களை வெளிப்படுத்தியதோடு, சக்திவாய்ந்த ஓபியாய்டு வலி நிவாரணி OxyContin தயாரிப்பாளரான பர்டூ பார்மா மீது வழக்குத் தொடர்ந்தார். ஷாபிரோ ஒரு திறமையான பேச்சாளர் மற்றும் ஒரு உறுதியான மையவாதியாகும்.
மற்றவர்களுக்கான வாய்ப்பு?
இதனிடையே, இல்லினாய்ஸ் கவர்னர் ஜேபி பிரிட்ஸ்கர், மேரிலாந்து கவர்னர் வெஸ் மூர் மற்றும் கென்டக்கி கவர்னர் ஆண்டி பெஷியர் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. இருப்பினும், வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெற உள்ள ஜனநாயக கட்சி மாநாட்டில் தான், அடுத்த அதிபர் வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.