சிக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளனர். குறிப்பாக, கனடாவில் காலிஸ்தான் அதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தி வருகிறது. காலிஸ்தான் தீவிரவாதிகளிடம் கனட அரசு மென்மையாக நடந்து கொள்கிறது என தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.


இந்தியா - கனடா இடையே பதற்றம்:


இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இப்போது  விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இது, இரு நாட்டு உறவில் பெரும் சிக்கலை உண்டாக்கி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு திரும்பி செல்லும்படி கனட வாழ் இந்துக்களுக்கு எதிராக குர்பத்வந்த் சிங் பண்ணுன் உள்ளிட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். 


"கனடா வாழ் இந்துக்கள் அச்சத்தில் வாழ்க்கின்றனர்"


இந்த நிலையில், கனடாவில் உள்ள இந்துக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக அந்நாட்டு ஆளுங்கட்சி எம்பி பகீர் கிளப்பியுள்ளார். காலிஸ்தானி தீவிரிவாதிகளுக்கு எதிராக கனட அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுங்கட்சி எம்பி சந்திரா ஆர்யா இன்று தெரிவித்துள்ளார்.


சிபிசி செய்தி நிறுவனத்திற்கு சந்திரா ஆர்யா அளித்த பேட்டியில், "நாடாளுமன்றத்தில் பிரதமர் (ட்ரூடோ) பேசிய பிறகு என்ன நடக்குமோ என்று நான் மிகவும் கவலைப்படுகிறேன். கனட வாழ் இந்துக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள், கனடா வாழ் இந்துக்களை அச்சமூட்டுகின்றன" என்றார்.


"வன்முறை நிரம்பிய காலிஸ்தான் இயக்க வரலாறு"


கனடாவில் மதவெறி ரத்தக்களரிக்கான அபாயம் இருப்பதாக பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரை ஒன்றை குறிப்பிட்டு பேசிய அவர், "சிந்தப்போகும் ரத்தம் கனடா வாழ் இந்துக்களுக்கு சொந்தமானதாக இருக்கும் என்பதை நினைத்துதான் கவலைப்படுகிறேன்" என்றார்.


கனட வாழ் இந்துக்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்பதற்கான மூன்று காரணத்தை மேற்கோள் காட்டிய சந்திரா ஆர்யா, "முதலாவதாக, காலிஸ்தான் இயக்கத்தின் வரலாறு வன்முறை மற்றும் கொலைகளால் நிரம்பியுள்ளது. காலிஸ்தான் இயக்க வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.


இரண்டாவதாக, சமீபத்தில், கனடாவில் சென்ற அணிவகுப்பு வாகனம் ஒன்றில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டது போன்று காட்சிப்படுத்தப்பட்டது. அதை, இங்கிருந்த பொதுமக்கள் கொண்டாடினர். மூன்றாவதாக, நீதிக்கான சீக்கியர்களின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் இந்து கனேடியர்களை நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு அச்சுறுத்தினார். இந்த வகையான வெறுப்பு செயல்கள் எந்த விளைவுகளும் இன்றி வெளிப்படையாக செய்யப்படுகின்றன" என்றார்.