உலக பிரபல சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியாவின் 13வது பட்டத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 27 வயதான ஜஸ்டின் நாராயன் என்பவர் கைப்பற்றியுள்ளார். போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், 2,50,000 ஆஸ்திரேலியன் டாலர் பரிசுத்தொகையை தட்டிச் சென்றுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வென்றுள்ளார் அவர்.
இதற்கு முன்பு, 2018-ம் ஆண்டு நடைபெற்ற மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த சஷி செல்லையா வெற்றி பெற்றிருந்தார். மிக கடுமையான போட்டியாக கருதப்படும் இந்த சமையல் நிகழ்ச்சியில், ஜஸ்டின் நாராயன் வெற்றி பெற்றதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியா பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின், தனது 13 வயதில் இருந்து சமையல் கலையில் ஆர்வம் கொண்டவராம். அவரது அப்பா, அம்மா என குடும்பம் முழுக்க இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. குக்கிங்கில், அவரது அம்மாவை இன்ஸ்பிரேஷனாக கொண்டவர், இந்திய உணவு வகைகளை விரும்பி சமைப்பவர்.
இந்த போட்டியில் கலந்து கொண்டது முதல், ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த அவர், இந்திய உணவு வகைகளை மட்டும் கில்லாடியாக சமைத்து நடுவர்களின் பாராட்டுகளை பெற்றிடுவார். இந்தியன் ஸ்டைல் சிக்கன் கிரேவி, சிக்கன் டாகோஸ், பிக்கிள் சாலட் ஆகியவற்றை சிறப்பாக சமைப்பவர். இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு, 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த அவர் இங்கு பின்பற்றப்படும் சமையல் முறைகளை, சமையல் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்துள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், சுயமாக ஒரு ‘ஃபுட் ட்ரக்’ அமைக்கும் திட்டத்தில் இருக்கிறார் ஜஸ்டின். மேலும், இதில் கிடைக்கும் வருமானத்தை இந்தியாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பிற்கு உதவி செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வாழ்த்துகள் ஜஸ்டின்!
பிரபலமான இந்த நிகச்சியின் 13-வது பதிப்பு முடிவுக்கு வந்துள்ளது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் ப்ரீமியமில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் காணலாம். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலும் சமையல் நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் அதிகம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து, மற்ற சேனல்களிலும் சமையல் போட்டிகள் ஒளிபரப்பாக உள்ளது.
அந்த வரிசையில், பிரபல தொலைக்காட்சி நிகழ்த்தும் ’மாஸ்டர் செஃப்’ என்னும் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிராமப்புற நடனக்கலைஞர்களுடன் விஜய் சேதுபதி துள்ளல் ஆட்டம் போட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. ஆஸ்திரேலிய டிவி சீரிஸான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியைத் தழுவி இந்த நிகழ்ச்சி எடுக்கப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் கடந்த 1990ம் ஆண்டு முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. உலக அளவில், இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இந்தியாவிலும் ஒளிபரப்பாகவுள்ளது.