ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படுவது ஊடகம். மக்கள் குரலாக இருந்து அவர்களின் பிரச்னையை பிரதிபலிப்பதே ஊடகத்தின் தலையாய கடமையாகும்.


அப்படி, மக்களின் குரலாக இருந்து பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவது சமீப காலமாகவே அதிகரித்து வந்துள்ளது. இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் இதுபோன்ற போக்கு நிலவி வருகிறது.


இந்நிலையில், உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்படுவது உச்சத்தை தொட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரை, 363 செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக பத்தியாளர்களை பாதுகாக்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் அரசு சாரா அமைப்பான பத்தியாளர்களை பாதுகாக்கும் கமிட்டி வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான சிறை கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டை விட 20 சதவகிதம் அதிகமான பத்திரிகையாளர்கள் இந்தாண்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சீரழிந்து வரும் ஊடக நிலப்பரப்பில் மற்றொரு மோசமான மைல்கல் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், சீனா, மியான்மர், துருக்கி, பெலாரஸ் ஆகிய நாடுகளில்தான் அதிக அளவில் பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


"கொராோனா மற்றும் உக்ரைன் மீதான ரஷிய போரின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் சீர்குலைந்த உலகில் உள்ள அதிருப்தியை மூடிமறைக்கும் நோக்கத்துடனே ஊடகத்தை ஒடுக்க சர்வாதிகார அரசுகள் அதிகளவில் முயற்சிகளை எடுக்க காரணம்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்படுவது குறித்து பேசியுள்ள கமிட்டி, "இந்தியாவில் ஏழு பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, ஊடகத்தை நடத்தும் விதம் ஆகியவை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 


குறிப்பாக, தனி வழக்குகளில் பிணை வழங்கப்பட்ட பிறகும், ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம், தடுப்பு காவல் சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தி காஷ்மீர் பத்திரிக்கையாளர்களான ஆசிப் சுல்தான், ஃபஹத் ஷா மற்றும் சஜாத் குல் ஆகியோரை சிறையில் அடைத்தது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.


 






இந்த ஏழு பத்திரிகையாளர்களில் ஆறு பேர் பயங்கரவாதம் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் அல்லது குற்றம் சாட்டப்பட்டனர்" என குறிப்பிட்டுள்ளது.


ஆட்சியாளர்கள் ஊடக சுதந்திரத்தை நசுக்க மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்களில் ஒன்றே பத்திரிகையாளர்களை கைது செய்வது.


உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், போலி செய்தி சட்டங்கள், தெளிவற்ற சட்டங்கள் போன்ற தந்திரங்களை பயன்படுத்தி பத்திரிகை தொழிலை குற்றமாக்கி வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.