தற்போது, ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் உடனான போரில் ரசாயன அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை எச்சரித்துள்ளார்.


 






"வேண்டாம், வேண்டாம், வேண்டாம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் நீங்கள் போரின் முகத்தையே மாற்றி விடுவீர்கள்" என பைடன் எச்சரித்திருந்தார்.


வெள்ளை மாளிகையில் சிபிஎஸ் செய்தி தொகுப்பாளர் ஸ்காட் பெல்லிக்கு அளித்த பேட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பப்பட உள்ளது. புதின் எல்லையைத் தாண்டினால் என்ன விளைவுகள் ஏற்படும் என பெல்லி கேட்டதற்கு பதில் அளித்த பைடன், "அது என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரிந்தால் நான் உங்களுக்குச் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா? 


நிச்சயமாக, நான் உங்களுக்கு சொல்ல மாட்டேன். அப்படி சொன்னால் அது விளைவுகளை ஏற்படுத்திவிடும். அவர்கள் முன்னெப்போதையும் விட உலகில் 
விரும்பதாகவர்களாக மாறிவிடுவார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து என்ன பதில் அளிக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும்" என்றார்.


உக்ரைனில் போரை தவிர்த்து, பொருளாதாரம் மற்றும் அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல்கள் உள்பட பல பிரச்னைகள் பற்றி பைடனிடம் பெல்லி கேள்வி எழுப்பினார். ரஷியாவிற்கு எதிராக உக்ரைனிய ராணுவம் வேகத்தை தக்கவைக்க உதவும் வகையில், பைடன் அரசு மேலும் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவ உதவியாக அறிவித்துள்ளது.


உக்ரைனின் சமீபத்திய போர்க்கள வெற்றி மற்றும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றியும் பெல்லி பைடனிடம் பேசினார். "போர்க்களத்தில் உக்ரைன் வெற்றிபெறுகையில், ஒரு மூலையில் தள்ளப்படுவதை எண்ணி புதின் வெட்கப்படுகிறார்" என பெல்லி கூறினார். "மேலும், மிஸ்டர் அதிபரே, அவர் ரசாயன அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டால் நீங்கள் அவரிடம் என்ன சொல்வீர்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என பெல்லி கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதில் அளித்த பைடன், ""வேண்டாம், வேண்டாம், வேண்டாம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் நீங்கள் போரின் முகத்தையே மாற்றி விடுவீர்கள்" என்றார்.


தேசிய ரயில்வே வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்கான தனது முயற்சிகள் பற்றியும் பைடன் பெல்லியிடம் கூறினார். வியாழன் அன்று, அமெரிக்க தொழிலாளர் துறையிடம் 20 மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரயில் மற்றும் இரயில் ஊழியர் சங்கங்களுக்கு இடையே ஒரு தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அதிபர் அறிவித்தார்.