அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


பிடனின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”லாஸ் வேகாஸில் நடைபெற்ற பிரச்சாரத்தை தொடர்ந்து அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 


அவரது சுவாச விகிதம் 16- ல் இயல்பாக உள்ளது. அவரது வெப்பநிலை 97.8 ஆக சாதாரணமாக உள்ளது. அவரது இதய துடிப்பு 97%ல் இயல்பாக உள்ளது. ஜனாதிபதிக்கு பாக்ஸ்லோவிட் மருந்தின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ரெஹோபோத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஜோ பைடனின் மருத்துவர் கெவின் ஓ கானர் கூறுகையில், “ஜனாதிபதிக்கு இருமல், மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சினைகளை கொண்டிருந்தார்” எனத் தெரிவித்தார். 


பிடிஐக்கு அவர் அளித்த பேட்டியில், “முதல் நாள் பிரச்சாரம் நன்றாக இருந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் அவருக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பிசிஆர் உறுதிபடுத்துதல் சோதனை மட்டும் நிலுவையில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், “இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. நான் தற்போது நன்றாக இருக்கிறேன். வாழ்த்துகளுக்கு நன்றி. நான் குணமடைய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். அதே நேரத்தில் அமெரிக்க மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.