அமெரிக்க விமானப்படை அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற  அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் அமெரிக்காவின் 46வது அதிபராகப் பதவியேற்றார். இதற்கிடையில் அடுத்தாண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் போட்டியிட உள்ளதாக  80 வயதான ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், அதிபராக இருக்கும்போது தொடங்கிய பணிகளை முடிப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும், தனது அரசியல் அனுபவங்கள் அதற்கு உதவியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். 


இப்படியான நிலையில் நேற்றைய தினம் கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிபர் ஜோ பைடன் பதவியேற்றார். அப்போது மேடையேறிய அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் அவரை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஜோ பைடனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. 






இதனையடுத்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பைடனிடம், நிருபர்கள் கீழே விழுந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக சமீபத்தில் ஜப்பானில் நடந்த G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற  பைடன் தடுமாறினார். அங்குள்ள ஹிரோஷிமாவில் உள்ள இட்சுகுஷிமா ஆலயத்தில் ஒரு சிறிய படிக்கட்டுகளில் அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தபோது, ​​அவரது கால் தடுமாறியது. ஆனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட பைடன் கீழே விழாமல் தற்காத்துக் கொண்டார். 


ஜோ பைடன் கீழே விழுந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘இது ஒன்றும் ஆச்சரியப்படும் விஷயமில்லை. இதைப் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. உண்மையில் கீழே விழுந்தார் என்றால், பைடன் காயம் அடைந்திருக்க மாட்டார் என நம்புகிறேன். இருந்தாலும் அவர் கவனமாக இருக்க வேண்டும்’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.