உலகம் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக, பெரு நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தினந்தோறும் வெளியாகும் இது தொடர்பான செய்திகள் மாத சம்பளம் வாங்குபவர்கள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.


உலக பணக்காரர் பட்டியல்:


ஆனால், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர்களின் சொத்துப் பட்டியலைப் பார்த்தால் வேலையை விட்டு தூக்கும் நிறுவன உரிமையாளர்கள் வளர்ச்சி மட்டும் குறையவில்லை என்றே தோன்றுகிறது. இப்படிப்பட்ட சீரற்ற பொருளாதார நிலைக்கு மத்தியிலும், உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதில் தொடர் போட்டி நிலவி வருகிறது.


பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் மாறி மாறி முதல் இடம் பிடித்து வருகின்றனர். இந்தாண்டு தொடங்கியதில் இருந்து, இருவருக்கும் போட்டி நிலவி வருகிறது.


இந்நிலையில், பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்த எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். இவர், பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.


மீண்டும் கெத்து காட்டிய எலான் மஸ்க்:


அர்னால்டுக்கு சொந்தமான LVMH நிறுவனத்தின் பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார் அர்னால்ட். தொழில்நுட்ப துறையில் பெரும் சரிவு நிலை நிலவி வந்த போது, அர்னால்ட் உலகின் முதல் பணக்காரர் ஆனார். 1981இல் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்து ரியல் எஸ்டேட் துறையில் தொழிலை தொடங்கியவர் அர்னால்ட்.


1984இல் பிரான்சுக்குத் திரும்பிய அர்னால்ட், கிறிஸ்டியன் டியருக்கு சொந்தமான வங்கியால் திவாலானதாக அறிவிக்கப்பட்ட Boussac Saint-Freres என்ற ஜவுளி நிறுவனத்தை வாங்கினார். 


யார் முதலிடம்?


பின்னர், அந்நிறுவனத்தின் மற்ற தொழில் நிறுவனங்களை விற்று, அதில் கிடைத்த பணத்தின் மூலம் எல்விஎம்ஹெச் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கினார். இதை தொடர்ந்து, லூயிஸ் உய்ட்டன் மற்றும் மோட் ஹென்னெஸி ஆகிய அதன் இரண்டு முக்கிய நிறுவனங்களை எல்விஎம்ஹெச் நிறுவனத்துடன் இணைத்து புதிய பிராண்டை உருவாக்கினார்.


கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH நிறுவனத்தின் பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது. மறுபக்கம் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார். எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்களாகவும் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.